;
Athirady Tamil News

நொய்டா இரட்டை கோபுரம்: 32 மாடி கட்டிடம் 9 வினாடிகளில் நாளை மதியம் தரைமட்டமாகிறது..!!

0

டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவில் சூப்பர் டெக் நிறுவனம் சார்பில் மிக பிரமாண்டமான இரட்டை கோபுர அடுக்கு மாடி கட்டிடம் கட்டப்பட்டது. இதில் அபெக்ஸ் என்ற கட்டிடம் சுமார் 328 அடி உயரத்தில் 32 மாடிகளை கொண்டது. மற்றொரு கட்டிடமான சியான் 318 அடி உயரத்துடன் 29 மாடிகளை உடையது. சுமார் ரூ.1,200 கோடி மதிப்பிலான இந்த இரட்டை மாடி கட்டிடத்தில் 900 குடியிருப்புகள் உள்ளது. இதில் 3ல் 2 பங்கு வீடுகள் விற்பனை ஆகிவிட்டது. இந்த நிலையில் இந்த கட்டிடங்கள் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இரட்டை கோபுர கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டனர். மேலும் இங்கு குடியிருப்புகளை வாங்கிய பொதுமக்களுக்கு 14 சதவீத வட்டியுடன் பணத்தை திருப்பி கொடுக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது. நீதிமன்றம் உத்தரவுபடி கட்டிடத்தை இடிக்கும் பணி பல முறை தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் நாளை (28-ந்தேதி) கண்டிப்பாக இடிக்க வேண்டும் என கெடு விதிக்கப்பட்டு உள்ளதால் அதற்கான பணி தீவிரமாக நடந்து வருகிறது. வெடி பொருட்களை பயன்படுத்தி நாளை மதியம் 2.30 மணியளவில் இந்த இரட்டை கோபுர கட்டிடம் தகர்க்கப்பட இருக்கிறது. கட்டித்தின் சில பகுதிகள் ஏற்கனவே கட்டுமான தொழிலாளர்கள் மூலம் இடிக்கப்பட்டது. கட்டிடத்தை முழுமையாக தரைமட்டமாக்க அதன் தூண்களில் டிரில் எந்திரம் மூலம் மொத்தம் 20 ஆயிரம் துளைகள் போடும் பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. அதில் 3,700 கிலோ சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் பொருத்தப்படுகிறது. இந்த வெடி பொருட்கள் அரியானா மாநிலத்தில் இருந்து வரவழைக்கபட்டு உள்ளன. இந்த பணிகளில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். நீர்வீழ்ச்சி என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த இரட்டை மாடி கட்டிடம் இடிக்கப்படுகிறது. வெடிபொருட்களை வெடிக்க செய்ததும் 9 வினாடிகளில் கட்டிடம் முழுமையாக இடிந்து விழுந்துவிடும். கட்டிடம் இடிந்ததும் உள்புறமாக விழும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வெளிப்புறத்தில் எந்த பாதிப்பும் இருக்காது என்றும் 30 மீட்டர் தூரத்துக்கு இதன் அதிர்வுகள் இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் 55 ஆயிரம் டன் கட்டிட இடிபாடுகளின் குப்பை சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த இடிபாடுகளை உடனே அப்புறப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த பணிகள் 2 அல்லது 3 நாட்கள் நடக்கும் என தெரிகிறது. இந்த கட்டிடங்களை இடிக்க ரூ. 20 கோடி செலவிடப்பட உள்ளது. கட்டிடங்கள் இடிக்கப்படுவதால் அதனை சுற்றியுள்ள குடியிருப்புகளில் வசித்து வரும் 7 ஆயிரம் பொது மக்கள் நாளை (ஞாயிற்றுக் கிழமை) காலை 7 மணிக்குள் வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. பின்னர் அவர்கள் மாலை 5 மணிக்கு மேல் மீண்டும் தங்கள் இருப்பி டங்களுக்கு திரும்பலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 2,500-க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அருகில் உள்ள மெட்ரோ ரெயில் நிலைய வாகன நிறுத்தத்தில் நிறுத்த ஏற்பாடு செய்யப் பட்டு இருக்கிறது. கட்டிடங்கள் இடிக்கப்படுவதற்கு முன்பாக பிற்பகல் 2.15 முதல் 2.45 வரை நொய்டா விரைவு சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தபடுகிறது. அதன் பின்னர் மீண்டும் போக்குவரத்து தொடங்கும். இடிப்பு பணியின்போது கியாஸ் மற்றும் மின் இணைப்புகள் அனைத்தும் மாலை 4 மணி வரை துண்டிக்கப்படும். இடிப்பு பணியின்போது அந்த கட்டிடத்தின் மேல் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. கட்டிட தகர்ப்பகை டிரோன் மூலம் படம் பிடிக்க நினைப்பவர்கள் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். இதை மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இரட்டை அடுக்கு மாடி கட்டிடங்கள் தற்போது போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. அதனை சுற்றி தடுப்புகள் அமைத்து போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 9 ஆண்டு கால நீண்ட போராட்டத்திற்கு பிறகு வெறும் 9 நொடிகளில் இந்த கட்டிடங்கள் தகர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.