குஜராத்தில் நடைபெற்ற கதர் உற்சவம் நிகழ்ச்சி- பிரதமர் மோடி பங்கேற்பு..!!
சுதந்திர திருநாள் அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாக குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள சபர்மதி ஆற்றகரையில் இன்று கதர் உற்சவம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுதந்திரப் போராட்டத்தின் போது கதர் ஆடைகளுக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி அறிவுறுத்தியதை போற்றும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ராட்டையில் நூல் நூற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
குஜராத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கதர் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 7,500 பெண்கள் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேலும் பங்கேற்றார். 1920களில் இருந்து பயன்படுத்தப்பட்ட பல்வேறு தலை முறைகளை சேர்ந்த 22 ராட்டைகள் இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. சுதந்திரப் போராட்டத்தின் போது பயன்படுத்தப்பட்ட ராட்டைகள் முதல் இன்று பயன்படுத்தப்படும் நவீன கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பம் கொண்ட ராட்டைகள் வரை இதில் இடம் பிடித்தன. கதர் துணியை பிரபலப்படுத்தவும், கதர் ஆடைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இளைஞர்களிடையே கதர் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் பிரதமர் மோடியின் தொடர் முயற்சியாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் முயற்சியின் விளைவாக, 2014 முதல், இந்தியாவில் கதர் விற்பனை நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகவும், அதேசமயம், குஜராத்தில் மட்டும் கதர் விற்பனை எட்டு மடங்கு அதிகரித்துள்ளது என்று மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.