குட்டியுடன், பெண் யானை சாவு..!!
வால்பாறை தோட்ட பகுதியில் குட்டியுடன், தாய் யானை இறந்து கிடந்தது. இதனால் பிரசவத்தின் போது இறந்ததா என்று விசாரணை நடைபெற்று வருகிறது.
காட்டு யானைகள் நடமாட்டம்
கோவை மாவட்டம் வால்பாறை பன்னிமேடு, சோலையார், தாய்முடி, அக்காமலை உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகிறது. இதில், ஆனைமுடி எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டு இருந்தன. இதில் கர்ப்பிணி யானை ஒன்று தாய்முடி எஸ்டேட் மத்திய பிரிவு தேயிலை தோட்ட பகுதியில் கடந்த 3 நாட்களாக நடமாடி வந்ததை மானாம்பள்ளி வனத்துறையினர் பார்த்துள்ளனர். எனவே அங்கு வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இறந்து கிடந்தன
இந்த நிலையில் தாய்முடி எஸ்டேட் மத்திய பிரிவு 7-ம் நம்பர் தேயிலை தோட்டத்தையொட்டி சேறும் சகதியுமான இடத்தில் தாய் யானை மற்றும் குட்டி யானை ஒன்று இறந்து கிடந்தது. இதை பார்த்து வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். குட்டி ஈன்றதற்கு அடையாளமாக தாய் யானையின் ரத்தத்துடன் இறந்து கிடந்தது. அங்கிருந்து 20 மீட்டர் தொலைவில் குட்டி யானையும் இறந்து கிடந்தது.இது குறித்து மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் களஇயக்குனர் மற்றும் துணை களஇயக்குனர் மற்றும் வனத்துறை கால்நடை டாக்டர் ஆகியோருக்கு தகவல் கொடுத்தார்.
உடல் நலக்கோளாறு
அதன்பேரில் குட்டி மற்றும் தாய் யானையின் உடல்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. குட்டி போடும் சமயத்தில் ஏற்பட்ட உடல் நலக்கோளாறு அல்லது குட்டி குறைபிரசவத்தில் பிறந்ததால் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு தாய் யானை மற்றும் குட்டி யானை இறந்ததா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.