அகமதாபாத்தில் அடல் நடைமேம்பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!!
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அகமதாபாதில் சபர்மதி ஆற்றங்கரையில் நடந்த காதி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் 7,500 பெண்கள் ராட்டையை சுழற்றி நூல் நூற்றனர். இது புதிய சாதனையாகும். இதில் பங்கேற்ற பிரதமர் மோடியும் ராட்டையில் நூல் நூற்றார். இதைத் தொடர்ந்து, அகமதாபாத் மாநகராட்சியால் கட்டப்பட்டுள்ள 984 அடி நீளமும், 45 அடி அகலமும் உள்ள நடைபாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். எல்.இ.டி., விளக்குகள் அலங்காரத்துடன் கூடிய இந்த நடைபாலத்தை மக்கள் நடந்தபடி கடக்கலாம். சைக்கிளில் செல்லும் வசதியும் உள்ளது. பாலத்தின் நடுவே பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணியரைக் கவரும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் பாலத்துக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவாக, அடல் என பெயரிடப்பட்டுள்ளது. சபர்மதியின் மேற்குப் பகுதியில் உள்ள மலர் பூங்காவையும், கிழக்குப் பகுதியில் அமைக்கப்பட உள்ள கலை மற்றும் கலாசார மையத்தையும் இணைக்கும் வகையில் இந்த நடை பாலம் அமைந்துள்ளது. நடைபாலத்தைத் திறந்து வைத்து பிரதமர் மோடி பேசுகையில், கடந்த 1996ல் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் குஜராத்தின் காந்திநகர் லோக்சபா தொகுதியில் மிகப் பெரிய சாதனை வெற்றி பெற்றார். இந்த மாநிலத்தை நேசித்த அவருக்கு குஜராத் மக்களின் சிறந்த மரியாதையாக இந்தப் பாலம் அமைந்துள்ளது. இந்தப் பாலம் சபர்மதி நதியின் இரண்டு கரைகளை மட்டும் இணைக்கவில்லை. புதுமை மற்றும் புதிய வடிவமைப்பையும் வெளிப்படுத்தியுள்ளது. காற்றாடி திருவிழாவை நினைவுபடுத்தும் வகையில் இது அமைந்துள்ளது என குறிப்பிட்டார்.