நாடு முழுவதும் செப்டம்பர் 17-ந் தேதி நடக்கும்; கடற்கரை தூய்மைப்பணி தன்னார்வலர் பதிவுக்கு செயலி..!!
‘தூய்மையான கடல் பாதுகாப்பான கடல்’
மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார் இயக்குனர் நகுல் பராசரர், தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவன இயக்குனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்தியாவின் 7 ஆயிரத்து 500 கி.மீ. நீள கடற்கரை, அதிகமான கடல் வளங்களை கொண்டது. கடலின் சுற்றுச்சூழலில் மிக அதிக அளவில் பிளாஸ்டிக்குகள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இது குறித்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகளின் சுத்தமான கடற்கரை ஒப்பந்தத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. வருகிற 2025-ம் ஆண்டுக்குள் கடலை பாதிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் குறைப்பது, நிலப்பகுதிகளில் மாசுபாடுகளை குறைத்து கடலில் குப்பைகள் சேராமல் பாதுகாப்பது அவசியம். சர்வதேச அளவில் கடற்கரையை சுத்தப்படுத்தும் தினம் செப்டம்பர் மாதம் 3-வது சனிக்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதி மத்திய அரசு பல்வேறு நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ‘தூய்மையான கடல் பாதுகாப்பான கடல்’ என்ற முழக்கத்துடன் நாடு முழுவதும் உள்ள அனைத்து கடற்கரைகளையும் சுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
செயலி அறிமுகம்
நம் நாடு சுதந்திரம் அடைந்து 75-ம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த நேரத்தில் 75 கடற்கரைகள் கண்டறியப்பட்டு, ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு 75 தன்னார்வலர்கள் குழு மூலம் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 3-ந் தேதியிலிருந்து தொடர்ந்து 75 நாட்கள் தூய்மையான கடல் பாதுகாப்பான கடல் என்ற நோக்கத்துடன் பிரசாரம் செய்யப்படுகிறது. காணொலி வாயிலாக வினாடி-வினா நிகழ்ச்சிகள், சிறு நாடகங்கள், போட்டிகள், உறுதி ஏற்புகள், பிளாஸ்டிக்கால் ஏற்படும் சவால்கள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. பிரசாரத்துக்காக புதிதாக ‘ஈக்கோ மித்ரம்’ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தன்னார்வலர்கள் பணியாற்ற பதிவு செய்து கொள்ளலாம். இந்த பிரசாரத்தில் மத்திய அரசின் புவியியல் துறை, சுற்றுச்சூழல் மற்றும் வன பாதுகாப்பு, காலநிலை மாற்றம் அமைச்சகம், நாட்டு நலப் பணித்திட்டம், இந்திய கடலோர காவல் படை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகள், சமூக அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர். விஞ்ஞான் பிரசார் முதுநிலை விஞ்ஞானி டி.வி.வெங்கடேசுவரன், ஆமை பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ஹபீஸ்கான் ஆகியோர் உடனிருந்தனர்.