பாகிஸ்தான் வெள்ளத்தில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி – பிரதமர் மோடி இரங்கல்..!!
பாகிஸ்தானில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளம் அதிகம் பாதித்த 110 மாவட்டங்களில் சுமார் 57 லட்சம் பேர் தங்குமிடம் மற்றும் உணவு இல்லாமல் உள்ளனர். பாகிஸ்தானில் கனமழை, வெள்ளத்துக்கு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் என தேசிய பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தேசிய அவசர நிலையை அறிவித்து, மீட்பு நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட அழிவைப் பார்த்து வருத்தமடைந்தேன். இந்த இயற்கைப் பேரிடரால் உயிரிழந்தோர், காயமடைந்தோர் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இதயபூர்வமான இரங்கலைத் தெரிவித்து, இயல்பு நிலை விரைவில் திரும்பும் என நம்புகிறோம் என பதிவிட்டுள்ளார்.