மலிவு விலையில் 5ஜி ஸ்மார்ட்போன் – ஜியோ வெளியிட்ட சூப்பர் அப்டேட்..!!
ரிலையன்ஸ் நிறுவனத்தின் 45 ஆவது வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மலிவு விலையில் 5ஜி ஸ்மார்ட்போன் உருவாக்கி வருவதாக அறிவித்து இருக்கிறது. இதற்காக கூகுள் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இருப்பதாகவும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்து உள்ளது. கடந்த ஆண்டு ஜியோபோன் நெக்ஸ்ட் மாடலை அறிமுகம் செய்ததைத் தொடர்ந்து புதிய 5ஜி ஸ்மார்ட்போனிற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 5ஜி சார்ந்த சேவைகளை உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயனர்களுக்கு ஜியோவின் தனியார் 5ஜி ஸ்டாக் மூலம் வழங்க கூகுள் நிறுவனத்தின் மேம்பட்ட கிளவுட் சேவையை பயன்படுத்த இருக்கிறது. இத்துடன் மெட்டா நிறுவனத்துடன் இணைந்து தலைசிறந்த தொழில்நுட்பத்தை அனைவருக்கும் வழங்க இருப்பதாக ஜியோ அறிவித்துள்ளது. ஜியோவின் கிளவுட்-ஸ்கேல் டேட்டா செண்டர்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் தொழில்நுட்பம், 5ஜி எட்ஜ் லொகேஷன், செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் இண்டெல் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாக ஜியோ தெரிவித்து இருக்கிறது. இதுதவிர எரிக்சன், நோக்கியா, சாம்சங் மற்றும் சிஸ்கோ போன்ற நிறுவனங்களுடன் நல்லுறவு கொண்டு இருப்பதாகவும் அறிவித்து இருக்கிறது. இத்துடன் குவால்காம் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இருப்பதாக ஜியோ அறிவித்து இருக்கிறது. சர்வதேச அளவில் முன்னணி செமிகண்டக்டர் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனமான குவால்காம் ஜியோ பிளாட்பார்ம்ஸ்-இல் முதலீடு செய்து இருக்கிறது. ஜியோவுடன் இணைந்து கிளவுட்-நேடிவ், 5ஜி உள்கட்டமைப்பு மற்றும் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது என குவால்காம் தலைமை செயல் அதிகாரி க்ரிஸ்டியானோ அமோன் தெரிவித்தார்.