வடக்கு மீனவர்களின் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஜேசுதாசன்!!
வடக்கு மீனவர்களின் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் நாட்டை பொருளாதார ரீதியாக முன்னேற்ற தற்போதைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை விடுத்து, ஆட்சி மாற்றத்திற்காக போராடியவர்களை கைது செய்வதனை கைவிட வேண்டும் என தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் ஜேசுதாசன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
இளைஞர்கள் போராடி ஒரு மாற்றத்தினை எதிர்பார்த்து செயற்பட்டு கொடுங்கோல் ஆட்சியை மாற்றி புதிய ஜனாதிபதியினை மாற்றி ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தி இருக்கின்றார்கள்.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மஹிந்த ஆட்சியினுடைய நிழல் ஆட்சியினை செய்து கொண்டிருக்கிறாரா? என்ற கேள்வி காணப்படுகின்றது.
ஜனநாயகம் தொடர்பில் பேசப்படும் போது போராட்டக்காரர்களை கைது செய்தல் செயற்பாடு தொடர்ந்து இடம்பெறுகின்றது.
அனைவரும் எதிர்பார்த்தார்கள் ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்தபோது பொருளாதார ரீதியில் மாற்றம் ஏற்படும் என்று, ஆனால் அவ்வாறு இடம் பெறவில்லை. மக்கள் மீண்டும் தொடர்ச்சியாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
வடமாகாண கடற்தொழிலாளர் இணையமும், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் இணைந்து குறிப்பாக மீனவர்களை பாதிக்கின்ற பிரச்சனைகள் தொடர்பில் ஊடகம் வாயிலாக ஆட்சியாளர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக மீனவ சமூகங்களின் கோரிக்கைகளை முன் வைப்பதற்காக கலந்துரையாடி இருக்கின்றோம்.
கடந்த 30 வருட காலமாக யுத்தத்தின் காரணமாக மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதே சுவடுகளை அதே துன்பங்களை சுமந்தவர்களாக தொடர்ச்சியாக வடக்கு மீனவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அத்தோடு இந்திய இழுவைமடி பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு இந்த வடக்கு மீனவர்கள் முகம் கொடுக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.
எனவே வடக்கு மீனவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இந்த அரசாங்கம் புதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”