வடக்கில் எதிர்வரும் 5ஆம் திகதி வரையில் மழை பெய்யும் வாய்ப்பு!!
வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் எதிர்வரும் 5ஆம் திகதி வரையில் அவ்வப்போது பரவலாக, மிதமானது முதல் கனமானது வரை மழை நீடிக்க வாய்ப்புள்ளது என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
யாழில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பல இடங்களில் மழை பெய்துள்ளது. அந்நிலையில் அது தொடர்பில் நாகமுத்து பிரதீபராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்லையே
அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் அவ்வப்போது கிடைத்து வரும் மழை எதிர்வரும் 05.09.2022 வரை தொடர வாய்ப்புள்ளது.
வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது மிகப் பரந்த பரப்பில் செல்வாக்கு செலுத்துவதன் காரணமாக மழை கிடைக்கும் போது செறிவான மழை கிடைக்கும் என்பதுடன் இடிமின்னல் நிகழ்வுடன் கூடியதாகவே இம்மழை கிடைக்கும்.
அத்துடன் இந்த வளிமண்டல சுழற்சி அடுத்த சில தினங்களில் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளையும் உள்ளடக்கியே அரபிக்கடல் நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் அவ்வப்போது பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை நீடிக்க வாய்ப்புள்ளது என்றுள்ளது.