இருசக்கர வாகன விபத்து மரணங்களில் தமிழ்நாடு முதலிடம்..!!
கடந்த ஆண்டு நடந்த சாலை விபத்துகள் மற்றும் அவற்றால் ஏற்பட்ட மரணங்கள் குறித்து தேசிய குற்ற ஆவண பிரிவு ஒரு புள்ளிவிவர அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டில் நாடு முழுவதும் சாலை விபத்துகளில் 1 லட்சத்து 55 ஆயிரத்து 622 பேர் மரணம் அடைந்துள்ளனர். அவற்றில் இருசக்கர வாகன விபத்துகளால் ஏற்பட்ட மரணம்தான் அதிகம். இந்த விபத்துகளில் 69 ஆயிரத்து 240 பேர் இறந்துள்ளனர். இது மொத்த சாலை விபத்து மரணங்களில் 44.5 சதவீதம் ஆகும். இருசக்கர வாகன விபத்துகளால் ஏற்பட்ட மரணங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. அங்கு 8 ஆயிரத்து 259 பேர் இறந்துள்ளனர். உத்தரபிரதேசம் (7 ஆயிரத்து 429 மரணங்கள்) 2-வது இடத்தை பிடித்துள்ளது. கார் விபத்துகளால் ஏற்பட்ட மரணங்களில் உத்தரபிரதேசமும், லாரி விபத்து மரணங்களில் மத்திய பிரதேசமும் முதலிடத்தை பிடித்துள்ளன. பஸ் விபத்துகளால் ஏற்பட்ட மரணங்களில் உத்தரபிரதேசம் (1,337) முதலிடத்தையும், தமிழ்நாடு (551) 2-ம் இடத்தையும் பிடித்துள்ளன.
மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரைதான் அதிகமான விபத்துகள் (20.2 சதவீதம்) நடந்துள்ளன. அந்த நேரத்தில் நடந்த விபத்துகளில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் நடந்த விபத்துகளால் ஏற்பட்ட மரணங்களில் உத்தரபிரதேசம் முதலிடத்தையும், தமிழ்நாடு 2-ம் இடத்தையும் பிடித்துள்ளன. மாநில நெடுஞ்சாலைகளில் நடந்த விபத்துகளில் தமிழ்நாடு முதலிடம் ெபற்றுள்ளது.
குடும்ப தலைவிகள் தற்கொலை
கடந்த ஆண்டு நடந்த தற்கொலைகள் குறித்த புள்ளிவிவர அறிக்கையையும் தேசிய குற்ற ஆவண பிரிவு வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு, 1 லட்சத்து 64 ஆயிரத்து 33 தற்கொலைகள் நடந்துள்ளன. இவர்களில் ஆண்கள் 1 லட்சத்து 18 ஆயிரத்து 979 பேர். பெண்கள் 45 ஆயிரத்து 26 பேர். தற்கொலை செய்து கொண்ட பெண்களில் பாதிக்கும் ேமற்பட்டோர் (23 ஆயிரத்து 178 ேபர்) குடும்ப தலைவிகள் ஆவர். 3 ஆயிரத்து 221 குடும்ப தலைவிகள் தற்கொலையுடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.தற்கொலை செய்து கொண்ட ஆண்களில், தினக்கூலி தொழிலாளர்கள் முதலிடத்தில் உள்ளனர்.
கற்பழிப்பு
கடந்த ஆண்டு, நாட்டின் 19 பெருநகரங்களில் மொத்தம் 3 ஆயிரத்து 208 கற்பழிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. அதில், 1,226 கற்பழிப்பு நிகழ்வுகளுடன் டெல்லி முதலிடத்தில் உள்ளது. மிகவும் குறைவான கற்பழிப்புகள் நடந்த பெருநகரங்களாக கோவை (12), கொல்கத்தா (11) ஆகியவை உள்ளன. அதிக கற்பழிப்பு நடந்த மாநிலமாக ராஜஸ்தான் உள்ளது.