கோதுமை மா விநியோகம் தொடர்பான அறிவிப்பு!!
பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்களிடம் தற்போதுள்ள கோதுமை மா இருப்பை சந்தைக்கு விநியோகிக்குமாறு எழுத்து மூலமான கோரிக்கை ஒன்றை விடுக்கவுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கோதுமை மா இறக்குமதி தொடர்பில் ,அமைச்சருக்கும் கோதுமை மா இறக்குமதியாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.
கோதுமை மா இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டதன் காரணமாக சந்தையில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அந்தக் கலந்துரையாடலில், கோதுமை மா உற்பத்தி விலை மற்றும் கொள்ளளவு தொடர்பில் கோதுமை மா இறக்குமதியாளர்களிடம் இருந்து அறிக்கையைப் பெற்றுக்கொள்ளுமாறு வர்த்தக அமைச்சர் அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
தற்போது நிலவும் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு காரணமாக 50 கிலோ கிராம் கொண்ட கோதுமை மாவின் விலை 20,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்தியா ஊடாக கோதுமை மா இறக்குமதி நிறுத்தப்பட்டமையே இதற்கான காரணம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், துருக்கி ஊடாக கோதுமை மாவை கொண்டு வருவதற்கு சுமார் 2 வாரங்கள் ஆகும் என்றும் அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.