வடகடல் நிறுவனத்தினை முன்கொண்டு செல்ல அமைச்சர் டக்ளஸ் புதிய திட்டம்!! (PHOTOS)
வடகடல் நிறுவனத்தின் வலை உற்பத்தி தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றவர்களை, பங்குதாரர்களாக உள்ளடக்கி, தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் வலைத் தொழிற்சாலைகளை செயற்படுத்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
லுணுவல தொழிற்சாலையை சேர்ந்த பணியாளர்களின் பிரதிநிதிகளை இன்றைய தினம் புதன்கிழமை சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
தற்காலிகமாக 5 பணியாளர்களைக் கொண்ட குழுவொன்றிற்கான விபரங்களை தருமாறும், அதனூடாக தொழிற்சாலை செயற்பாடுகளை தற்காலிகமாக முன்கொண்டு செல்வதற்கான ஒத்துழைப்பினை வழங்குவதாக தெரிவித்த அமைச்சர், தோல்வியடைந்த அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி கருத்து தெரிவித்துள்ள நிலையில், கடந்த கால அரசாங்கத்தின் வினைத்திறன் அற்ற செயற்பாட்டினால் பின்னடைவை சந்தித்துள்ள வடகடல் நிறுவனத்தினையும் அந்நிறுவனத்தின் பணியாளர்களையும் பங்குதாரர்களாக கொண்டு தனியார் முதலீட்டாளர்களை உள்ளீர்ப்பது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாத நிலையில் வடகடல் நிறுவனத்தின் லுணுவல வலை உற்பத்தி தொழிற்சாலையின் பணியாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் அது தொடர்பில் கவலை தெரிவித்தனர்.
அது தொடர்பில், ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடி, உரிய பரிகாரம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.