கல்முனையின் சட்டமொழுங்கு, போதையொழிப்பு, நிர்வாக சீரமைப்பு தொடர்பிலான கலந்துரையாடல்!!
கல்முனையின் சட்டமொழுங்கு, போதையொழிப்பு, நிர்வாக சீரமைப்பு தொடர்பிலான கலந்துரையாடல்
கல்முனை தொகுதிக்கு உட்பட்ட சட்டமொழுங்கு விடயம் சம்பந்தமாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று கல்முனை மாநகர முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இங்கு கல்முனை பிராந்திய கரையோர பிரதேசங்களில் சட்டவிரோத இடம்பெறும் காணி அபகரிப்புக்கள், அனுமதிகளின்றி சட்டவிரோதமாக கடற்கரை ஓரங்களில் கடையமைத்தல் போன்றவற்றில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் கல்முனை பிரதேசத்தில் சமீபத்தைய நாட்களில் தலைதூக்கியுள்ள போதைவஸ்து பாவனையை இல்லாதொழிக்க விற்பனையாளர்களுக்கும் பாவனையாளர்களுக்கும் எதிராக எவ்வித பாரபட்சமுமின்றி கடும் சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டு கலந்துரையாடப்பட்டது. மேலும் அரச அலுவலகங்களில் லஞ்சம் பெற்று கடமையாற்றுவதை தடுக்கும் நோக்கில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் அடிப்படையில் லஞ்ச ஊழலுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்த விடயங்களினால் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளுக்கு எடுத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் துரிதகதியில் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
இந்த கலந்துரையாடலில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றக்கீப், பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத் அலி, கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல். அஸ்மி, கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.றம்ஸீன் பக்கீர், கல்முனை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் எம்.எல் றபீக், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம். ரோஷன் அக்தர், சட்டத்தரணி ஆரிகா காரியப்பர், எம்.எஸ்.எம். சத்தார், எம்.எம். உமர் அலி, எம்.எஸ்.எஸ். நவாஸ், எப்.நஸ்ரின், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக செயலாளர் நௌபர் ஏ பாவா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.