பழங்குடியின வேலைக்கார பெண் கொடூர சித்ரவதை- ஜார்க்கண்டில் சஸ்பெண்ட் ஆன பாஜக பெண் தலைவர் கைது..!!
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி அசோக்நகரில் வசித்து வருபவர் சீமா பத்ரா. பாரதிய ஜனதா பெண் தலைவரான இவர் அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவரது வீட்டில் பழங்குடி இனத்தை சேர்ந்த சுனிதா( வயது 29) என்ற பெண் கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களாக இவரை சீமா பத்ரா கொடூரமாக சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. சூடான பொருட்களை சுனிதா உடலில் வைத்தும், இரும்பு கம்பியால் பயங்கரமாக தாக்கியும் அவர் சித்ரவதை செய்தாக புகார்கள் எழுந்தது. இரும்பு கம்பியால் அடித்ததில் சுனிதாவின் பற்கள் உடைந்தன. மேலும், முகம் முழுவதும் காயங்கள் ஏற்பட்டது. இதனால் அவர் வலியால் துடித்தார். ஆனாலும் சீமா பத்ரா இதனை கண்டுகொள்ளவில்லை. இதன் உச்சகட்டமாக சுனிதாவை கழிவறையில் சிதறி கிடந்த சிறுநீரை நாக்கால் சுத்தம் செய்யுமாறு கட்டாயபடுத்தியதாக கூறப்படுகிறது. வேலைக்கார பெண்ணை தனது தாய் கொடுமைபடுத்தியதை அறிந்த சீமா பத்ராவின் மகன் ஆயுஸ்மான் அவருக்கு உதவ முன் வந்தார். வீட்டில் நடந்த கொடுமை பற்றி அவர் தனது நண்பர்களிடம் கூறினார். இதையடுத்து அவர்கள் மூலம் உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து செயல்பட்டு சீமா பத்ரா வீட்டில் இருந்த சுனிதாவை மீட்டனர். முகம் மற்றும் உடலில் பல இடங்களில் காயங்களுடன் இருந்த அவர் ஆஸ்பத்திரியில் சிசிச்சைக்காக சேர்க்கபட்டு உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக சீமா பத்ராவை சஸ்பெண்டு செய்து பாரதீய ஜனதா நடவடிக்கை எடுத்தது. மேலும் ராஞ்சி போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான சீமா பத்ராவின் கணவர் மகேஷ்வர பத்ரா ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சுனிதா உருக்கமாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவரால் படுக்கையில் சரிவர எழுந்து உட்கார கூட முடியவில்லை. வாயில் பல பற்கள் இல்லாமல் மோசமான நிலையில் உள்ளார். தன்னை சீமா பத்ராவின் மகன்தான் காப்பாற்றினார். தனக்கு சில நாட்களாக சாப்பாடு, குடிநீர் கூட கொடுக்கவில்லை என உருக்கமாக பேசி உள்ளார். வேலைக்கார பெண்ணுக்கு மகன் உதவுவதை அறிந்த சீமா பத்ரா கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை உடல் நிலை சரியில்லை என கூறி அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.