விநாயகர் சதுர்த்தி: சென்னையில் இருந்து ஒரேநாளில் 1.21 லட்சம் பேர் பயணம்..!!
சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு வெளியூர்களுக்கு தினமும் 2200 அரசு விரைவு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் நேற்று சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து திருநெல்வேலி, திருச்சி, மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று மட்டும் மொத்தம் 236 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
இதனுடன் வழக்கமாக செல்லும் 2,200 பஸ்களும் சென்றன. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த பஸ்கள் மூலம் நேற்று ஒரேநாளில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 800 பேர் தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர். மேலும் பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு பஸ்நிலையத்தில் இருந்து தாம்பரம், பூந்தமல்லி ஆகிய இடங்களுக்கு மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் விடப்பட்டன.
இந்த நிலையில் கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களில் நேற்று அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்பட்டன. சென்னையில் இருந்து கோவைக்கு செல்ல ஆம்னி பஸ்களில் ரூ.1,500 கட்டணம் வசூலிக்கப்பட்டது. மதுரைக்கு ரூ.1,300, திருச்சிக்கு ரூ.1,200, சேலத்துக்கு ரூ.900 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் ஆம்னி பஸ்களில் சென்ற பயணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். விநாயகர் சதுர்த்தியையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக அனைத்து ரெயில்களும் நிரம்பின. தட்கல் டிக்கெட்டுகளும் உடனே விற்றுத் தீர்ந்தன. இதனால் பொது மக்கள் ஆம்னி பஸ்களின் பயணித்தனர்.
டீசல் விலை, வரி, சுங்க கட்டணம் என அனைத்தும் உயர்ந்துவிட்டதால் வார இறுதி நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் மட்டுமே லாபம் ஈட்ட முடியும் என்று கூறி ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது. மேலும் அரசு விரைவு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்களில் டிக்கெட் கிடைக்காத பயணிகள் பெருங்களத்தூர் பகுதியில் இருந்து தனியார் வாகனங்கள் மூலம் பயணம் செய்தனர். சேலம், திருச்சி போன்ற இடங்களுக்கு ஒவ்வொரு பயணியும் ரூ.700 முதல் ரூ.900 வரை கொடுத்து தனியார் வாகனங்களில் பயணம் செய்தனர், இதேபோல் பஸ் மற்றும் ரெயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகளிடம் நேற்று ஆட்டோ டிரைவர்கள் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக பயணிகள் புகார் செய்தனர்.