பொறுப்பு மாற்றப்பட்ட சில மணி நேரத்தில் ராஜினாமா செய்த பீகார் மந்திரி..!!
பீகாரில் முதல் மந்திரி நிதிஷ்குமார் தனது அமைச்சரவையை சமீபத்தில் விரிவாக்கம் செய்தார். அப்போது ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி மேலவை உறுப்பினர் கார்த்திகேய சிங் சட்டத்துறை மந்திரியாக பொறுப்பேற்றார். நிதிஷ்குமார் அமைச்சரவை விரிவாக்கம் நடந்த அன்று 2014-ம் ஆண்டில் நடந்த கடத்தல் வழக்கில் கார்த்திகேய சிங் டானாபூர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். ஆனால் அவர் அன்று நீதிமன்றத்துக்கு சென்று சரணடையாமல் பாட்னாவில் மந்திரியாக பதவியேற்றார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த விவகாரத்தில் நிதிஷ்குமாரை எதிர்க்கட்சியான பா.ஜ.க. கடுமையாக விமர்சனம் செய்தது. மேலும், கார்த்திகேய சிங்கை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என நிதிஷ்குமாரை பா.ஜ.க. வலியுறுத்தியது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார், இதைப்பற்றி எனக்கு எந்த தகவலும் இல்லை என தெரிவித்தார். ஆனாலும், கூட்டணியில் உள்ள காங்கிரஸ் இந்த சர்ச்சைக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி முதல் மந்திரி நிதிஷ்குமாரையும், துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவையும் வலியுறுத்தியது. இதற்கிடையே, கைது வாரண்டை எதிர்கொண்டுள்ள கார்த்திகேய சிங்கின் இலாகா மாற்றப்பட்டது. அவருக்கு கரும்பு தொழில்துறை ஒதுக்கப்பட்டது. அவரிடம் இருந்த சட்டத்துறை முதலில் கரும்பு தொழில் துறை அமைச்சகத்தை கவனித்த வந்த ஷமீம் அகமதுவுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், பீகார் முன்னாள் சட்டத்துறை மந்திரி கார்த்திகேய சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இலாகா மாற்றப்பட்ட சில மணி நேரங்களில் தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கார்த்திகேய சிங்கின் ராஜினாமாவை அம்மாநில கவர்னர் ஏற்றுக் கொண்டார்.