மேலதிக உதவிகளையும் வழங்க எதிர்பார்க்கிறோம்!!
சர்வதேச நாணய நிதியம் மூலம் இலங்கைக்கு வழங்கவுள்ள 2.9 பில்லியன் டொலருக்கு மேலதிகமாக மேலும் பாரிய தொகையை வழங்க எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதிய தூதுக்குழுவின் பிரதி தலைவர் மசாஹிரோ நொசாக்கி தெரிவித்தார். நாணய நிதியத்தின் இருதரப்பு மற்றும் பல்தரப்பு பங்காளிகள் ஊடாக வழங்கப்படும் எனவும் கூறினார்.
பொது நிதி முகாமைத்துவத்தில் கூடிய கவனம் செலுத்தியாக வேண்டும், குறிப்பாக ஊழல் அற்ற வேலைத்திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்குதல் அரசாங்கத்தின் கட்டாயப்பணியாக அமைய வேண்டும். அதற்கமைய உறுதியான ஊழல் தடுப்பு வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும். நிதி வெளிப்படைத்தன்மை மற்றும் பொது நிதி நிர்வாகத்தை மேம்படுத்துவதன் மூலம் ஊழல் பாதிப்புகளை குறைத்தல், வலுவான ஊழலுக்கு எதிரான சட்ட கட்டமைப்பை அறிமுகப்படுத்துதல் மற்றும் ஐ.எம்.எப் தொழில்நுட்ப உதவியால் ஆதரிக்கப்படும் ஆழமான ஆளுகையை கண்டறிதல் அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் வரிக்கொள்கையில் மாற்றத்தை உருவாக்க வேண்டும், இப்போதும் குறைவான மட்டத்திலேயே வரி அறவீடுகள் காணப்படுகின்றன. உயர் வருமானத்தை பெறுவோருக்கான வரி விதிப்புகளை அதிகரிக்க வேண்டும். முறையான கட்டமைப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டியது அவசியம் என்றார்.