தாவூத் இப்ராகிம் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.25 லட்சம் பரிசு- என்.ஐ.ஏ. அறிவிப்பு..!!
1993-ம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த தொடர் குண்டு வெடிப்புக்கு நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிம் மூளையாக செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. அவன் தனது கூட்டாளிகள் மூலம் இந்த சதி செயலில் ஈடுபட்டுள்ளான். தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானுக்கு தலைமறைவானான். தற்போது அவன் எங்கு இருக்கிறான் என்ற விவரம் தெரியவில்லை. தாவூத் இப்ராகிமை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவித்து இருந்தது.
விசாரணை அமைப்பான என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) கடந்த பிப்ரவரி மாதம் தாவூத் இப்ராகிமின் டி நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்தது. இந்தநிலையில் 1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிம் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.25 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என்று என்.ஐ.ஏ. இன்று அறிவித்துள்ளது. இதேபோல தாவூத் இப்ராகிமின் நெருங்கிய உதவியாளரான ஷகீல் ஷேக் என்கிற சோட்டா ஷகீலுக்கு ரூ.20 லட்சமும், கூட்டாளிகளான ஷாஜி அனிஸ் என்கிற அனிஸ் இப்ராகிம் ஷேக், ஜாவித் படேல் என்கிற ஜாவித் சிக்னா, இப்ராகிம் அப்துல் ரசாக் மேமன் என்கிற டைகர் மேமன் ஆகியோருக்கு தலா ரூ.15 லட்சமும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
இவர்கள் அனைவரும் 1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள். அவர்களை பற்றிய தகவல்களை என்.ஐ.ஏ. கேட்டுள்ளது. இது அவர்களை கைது செய்ய வழி வகுக்கும். டி கம்பெனி என்ற சர்வதேச பயங்கரவாத நெட் வொர்க்கை அனிஸ் இப்ராகிம் ஷேக், சோட்டா ஷகீல், ஜாவித் சிக்னா, டைகர் மேமன் ஆகியோருடன் இணைந்து நடத்தி வருகிறார். ஆயுதக்கடத்தல், போதை பொருள், பயங்கரவாதம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகிறது. லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தீவிரமாக இணைந்து செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.