சூயஸ் கால்வாயில் தரை தட்டிய எரிபொருள் டேங்கர் கப்பல்: 5 மணி நேர மீட்பு பணிக்கு பின் மிதக்க தொடங்கியது..!!
சிங்கப்பூர் சரக்கு கப்பலான ‘அபினிட்டி வி கப்பல்’ என்ற சரக்கு கப்பல், உலகின் முக்கிய நீர் வழித் தடங்களில் ஒன்றான எகிப்தின் சூயஸ் கால்வாய் வழியாக சென்றபோது குறுக்கே திரும்பி கால்வாயின் பக்கவாட்டில் சிக்கிக்கொண்டது.
64,000 டன் எரிபொருள் டேங்கர் கப்பலான அபினிட்டி வி 2016 இல் கட்டப்பட்டது. இது 252 மீட்டர் நீளமும் 45 மீட்டர் அகலமும் கொண்டது. போர்ச்சுகலில் இருந்து புறப்பட்ட இந்த கப்பல், சவுதி அரேபிய செங்கடல் துறைமுகமான யான்பு வரை செல்ல திட்டமிடப்பட்ட பயணத்தில் எதிர்பாராதவிதமாக இடையூறு ஏற்பட்டது.
நேற்று இரவு 7.15 மணியளவில் (உள்ளூர் நேரம்) அபினிட்டி வி கப்பல் தொழில்நுட்பக் கோளாறால் கால்வாயில் 143வது கிமீ தொலைவில், கரை ஒதுங்கியது. இதனால், உலகின் 12 சதவீத வா்த்தகத்துக்குப் பயன்படுத்தப்படும் அந்த கால்வாயில் கப்பல் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டது.
5-க்கும் மேற்பட்ட இழுவை படகுகளை கொண்டு அந்த ராட்சத சரக்கு கப்பலை கரையில் இருந்து நகர்த்தி மீண்டும் மிதக்க வைக்கும் பணிகள் சுமார் 5 மணி நேரமாக நடந்து வந்தன. தீவிர மீட்பு பணியின் பலனாக சரக்கு கப்பல் கரையிலிருந்து நகர்த்தப்பட்டு மீண்டும் மிதக்கத் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து மாலையில் அந்த கப்பல் அங்கிருந்து அகற்றப்பட்ட பின்னர் சூயஸ் கால்வாயில் முற்றிலும் இயல்பு நிலை திரும்பியது. சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஒசாமா ராபி கூறுகையில், கப்பலின் திசைமாற்றி பொறிமுறையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் அது கால்வாயின் கரையில் சிக்கியது.
கப்பலைக் காப்பாற்றுவதில் மீட்புப் பிரிவுகள் மற்றும் இழுவைகள் வெற்றி பெற்றதாக தெரிவித்தார்.