ஆதார் அட்டை உதவியால் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் இணைந்த மாற்றுத் திறனாளி..!!
கடந்த 2016 ஆண்டு நவம்பர் 28 ந்தேதி நாக்பூர் ரெயில் நிலையத்தில் 15 வயதுள்ள பேச்சு மற்றும் கேட்புத் திறன் இல்லாத சிறுவனை மீட்ட ரெயில்வே அதிகாரிகள் அவனை நாக்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். அந்த சிறுவனுக்கு பிரேம் ரமேஷ் இங்காலே என பெயரிடப்பட்டது. இந்தப் பெயரில் அந்த சிறுவனுக்கு ஆதார் அட்டை பெற அந்த காப்பகத்தின் கண்காணிப்பாளர் வினோத் தேப்ராவ் விண்ணப்பித்தார்.
ஆனால், அந்த சிறுவனின் கைரேகை ஏற்கனவே ஒரு ஆதார் எண்ணுடன் பொருந்தியிருந்ததால் புதிய ஆதார் எண்ணை உருவாக்க முடியவில்லை. இதையடுத்து, மும்பையில் உள்ள ஆதார் ஆணையத்தின் மண்டல அலுவலகத்திற்கு சென்ற அந்த காப்பக கண்காணிப்பாளர் பரிசோதித்துப் பார்த்ததில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சச்சின் குமார் என்ற பெயருடன் 2016 ஆண்டு ஆதார் எண் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் பீகாரில் உள்ள ககாரியா மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி சிறுவனான சச்சின்குமார் 2016 ஆண்டு நவம்பர் முதல் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அந்த ஆதார் அட்டையில் இருந்த முகவரிக்கு காவல்துறை மூலம் பெற்றோருக்கு தகவல் அனுப்பப்பட்டது. அந்த தகவலின் அடிப்படையில் அவனது தாய் மற்றும் உறவினர்கள் நாக்பூர் வந்து உரிய ஆவணங்களை சமர்ப்பித்து சச்சின் குமாரை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். 6 ஆண்டுகளுக்கு முன்னாள் காணால் போன சச்சின் குமார் ஆதார் அட்டை உதவியுடன் மீண்டும் தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார்.