வழிபாட்டுத்தலங்களை நிர்வகிக்க ஒரே மாதிரி சட்டம் கோரி வழக்கு – விரிவான மனு தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு..!!
பா.ஜ.க.வைச் சேர்ந்த வக்கீல் அஸ்வினி உபாத்யாய், ஜீதேந்தர சரஸ்வதி ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், ‘முஸ்லிம், பார்சி, கிறிஸ்தவர்களை போல இந்து, ஜெயின், புத்த, சீக்கியர்களுக்கும் வழிபாட்டுத்தலங்களின் அசையும், அசையா சொத்துகளை நிர்வகிக்க உரிமை வழங்க வேண்டும்.
இதுபோன்ற உரிமைகளை அரசு பறிக்க கூடாது. 18 மாநிலங்கள், இந்து, ஜெயின், புத்த, சீக்கியர்களுக்கான வழிபாட்டுத்தலங்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. இந்து, ஜெயின், புத்த, சீக்கியர்களுக்கான வழிபாட்டுத்தலங்களை நிர்வகிக்க உருவாக்கப்பட்டுள்ள மாநில சட்டங்கள் தன்னிச்சையானவை, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானவை என அறிவிக்க வேண்டும்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து மத வழிபாட்டுத்தலங்களையும் நிர்வகிக்க ஒரே மாதிரியான அறநிலைய சட்டங்களை உருவாக்க மத்திய அரசுக்கோ, இந்திய சட்ட ஆணையத்துக்கோ உத்தரவிட வேண்டும். கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களில் உள்ள வழிபாட்டுத்தலங்கள் கடவுள்மறுப்பாளர்களால் நிர்வகிக்கப்படுவது முரணாக உள்ளது.
வழிபாட்டுத்தலங்களின் நிதி ஆதாரங்களை மாநில அரசுகள் சீரழித்துள்ளன. திருப்பதி, குருவாயூர், சித்தி விநாயக், வைஷ்ணவதேவி கோவில்களில் கிடைக்கும் வருவாய் ஆளும்கட்சியினருக்கு பயன்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.
இந்த மனு தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அஸ்வினி உபாத்யாய், ஜீதேந்திர சரஸ்வதி சார்பில் மூத்த வக்கீல்கள் கோபால் சங்கர நாராயணன், அரவிந்த் தத்தர் ஆஜராகி மனுவில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து வாதிட்டனர். அப்போது நீதிபதிகள், ‘மனுவில் வெறும் வலியுறுத்தல்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இவற்றுக்கான சான்றுகளுடன் விரிவான மனுவாக தாக்கல் செய்யுங்கள்’ என உத்தரவிட்டனர்.