கடமையை தட்டிக்கழிக்க முடியாது !!
தற்போது இலங்கை முகம் கொடுத்து வரும் பாரிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வுகளை கண்டறியும் கடமை ஒட்டுமொத்த நாட்டுக்கும் இருக்கின்றது, அதை தவிர்க்க முடியாது என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இக்கடமையை ஆற்றும் முன்னோடிகளாக சட்டவாக்க உறுப்பினர்கள் செயல்பட வேண்டும். மேலும் நாட்டின் ஏனைய தொழிற்சங்கங்களும், அறிஞர் பெருமக்களும், சமுதாயத்தினரும் இந்த பொறுப்பை ஏற்று செயல்பட வேண்டும். நாம் தொடர்ச்சியாக இதை வலியுறுத்தி வருகின்றோம் . தற்போது நாட்டின் பல தொழிற்சங்க அமைப்புகளும் அரசாங்கமும் இவ்விடயம் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தி வருவதை நேர்மறையான விடயமாகவே நாம் கருதுகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கான அடிப்படை விடயங்களை நாட்டின் பாராளுமன்றமே மேற்கொள்ள வேண்டும். அதற்கமைய குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால வேலை திட்டங்களை வகுத்து, அவற்றை செயல்படுத்த வேண்டும். மேலும் அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு தேவையான மக்கள் வரவேற்பையும் வெளிப்படை தன்மையையும் உருவாக்கிக் கொள்வதற்கு இனங்காணப்பட்டுள்ள சீர்திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ரத்து செய்துவிட்டு நிறைவேற்றினால் சுவீகரிக்கப்பட்டுள்ள அளவில்லா அதிகாரங்களை அகற்ற வேண்டும். அதற்கு 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் சிறப்பம்சங்களை மீள் அமல்படுத்த வேண்டி இருக்கின்றது. இதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதிக்கும், நீதி அமைச்சருக்கும் பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியுள்ளோம். அது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி இருப்பதை நாம் பாராட்டுகின்றோம்.
22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான உயர் நீதிமன்ற பரிந்துரைகளை சபாநாயகருக்கு தெரிவித்ததின் பின்,விரைவில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். அதேபோன்று இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினரின் எதிர்காலம் கருதி பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம். இவ்விடயம் தொடர்பில் நாட்டின் அரசியல் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் செயலற்படும் முறையை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கான மதிப்பீடு எதிர்காலத்தில் வழங்கப்படும் என்பதையும் வலியுறுத்துகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.