வாகனங்களை பயன்படுத்தும் செவிப்புலன்வலுவற்றோருக்கு அடையாளச் சின்னம் வழங்கும் நிகழ்வு!! (PHOTOS)
வாகனங்களை பயன்படுத்தும் செவிப்புலன்வலுவற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாளச் சின்னம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் விது நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையில் வாகனங்களை பயன்படுத்தும் செவிப்புலன்வலுவற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாளச் சின்னம் வழங்குதல் தொடர்பில் வீதி பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் பொலிஸ்உத்தியோகத்தர்களை விழிப்புணர்வூட்டுதல் தொடர்பான நிகழ்வு மாவட்ட செயலர் தலைமையில் இன்றையதினம் வெள்ளிக்கிழமை மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் செவிப்புலன்வலுவற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாளச் சின்னம் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாங்கம் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றது. அதன்பொருட்டு விது நம்பிக்கை நிதியத்தின் மூலம் இவ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இவ் அடையாளச் சின்னத்தை செவிப்புலன் வலுவற்ற மாற்றுத்திறனாளிகளின் வாகனங்களில் பொருத்துவதற்கான நோக்கமானது போக்குவரத்தில் ஈடுபடும் பொதுமக்களுக்கும், சாரதிகளுக்கும் விழிப்புணர்வூட்டுவதற்காக ஆகும்.
இவ் விழிப்புணர்வு நடவடிக்கை முதற்கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்படுவதோடு, ஏனைய மாவட்டங்களிலும் அறிகப்படுத்தப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், மாகாண போக்குவரத்து ஆணையாளர், யாழ்.மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்கள உதவி ஆணையாளர், விது நம்பிக்கை நிதியத்தின் இயக்குனர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், செவிப்புலன் வலுவற்றோர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”