எந்த இலக்கையும் எட்டிப்பிடிக்கும் திறமை இந்தியாவுக்கு உள்ளது- பிரதமர் மோடி பேச்சு..!!
கொச்சி துறைமுகத்தில் ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலை பிரமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து பேசியதாவது:- ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல் ஒரு எந்திரம் அல்ல. அது இந்தியாவின் திறமையை வெளிப்படுத்தும் சான்று.இந்த சிறப்பு இந்தியாவுக்கும், இந்திய கடற்படைக்கும் கிடைத்த பெருமை. ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலை ஒரு மிதக்கும் விமான நிலையம், மிதக்கும் நகரம் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இதில் நவீன வசதிகள் உள்ளன. இக்கப்பலில் உள்ள மின்சாரம் தயாரிக்கும் கருவிகள் மூலம் 5 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்க முடியும். அந்த அளவுக்கு நவீன வசதிகள் இக்கப்பலில் உள்ளது. இதுபோல இன்று கடற்படையின் கொடியும் மாற்றப்பட்டுள்ளது. இன்று வரை இந்திய கடற்படையின் கொடி அடிமைத்தனத்தின் அடையாளமாக இருந்தது. அந்த கொடியை அகற்றி இப்போது சத்ரபதி சிவாஜியின் இலச்சினையுடன் கூடிய புதிய கொடி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. கடற்படையின் பழைய கொடியை மாற்ற உந்து சக்தியாக இருந்த வீர சிவாஜிக்கு விக்ராந்த் போர்க்கப்பலை அர்ப்பணிக்கிறேன். இதன்மூலம் இனி எந்த சவாலையும் இந்தியா சந்திக்கும். எந்த இலக்கையும் எட்டிப்பிடிக்கும் திறமை இந்தியாவுக்கு உள்ளது என்பது இதன்மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.