நாட்டின் கடல்சார் பாதுகாப்பிற்கு ஐஎன்எஸ் விக்ராந்த் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் – ராகுல் காந்தி..!!
முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ்.விக்ராந்த் கப்பலை பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். இந்த பிரமாண்டமான போர்க்கப்பலில் தொடக்க விழா கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் நடைபெற்றது. கடற்படையில் இணைந்துள்ள ஐ.என்.எக்ஸ்.விக்ராந்த் கப்பலில் ஏராளமான சிறப்பம்சங்கள் உள்ளன. ரூ.20 ஆயிரம் கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த போர்க்கப்பலை பி.எச்.இ.எல். மற்றும் எல்.என்.டி. உள்ளிட்ட சுமார் 500 இந்திய நிறுவனங்கள் ஒருங்கிணைந்து உருவாக்கி உள்ளன. இந்த கப்பல் இந்திய கடற்படைக்கு மேலும் பலத்தை கூட்டுவதாக அமைந்துள்ளது. மேலும் இந்து மகா சமுத்திரத்தில் இந்திய கடற்படைக்கு வலுசேர்த்து கடல் எல்லைகளை காக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உள்நாட்டிலேயே வடிவமைத்து, தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி கப்பலை இயக்கியதற்காக காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “ஐஎன்எஸ் விக்ராந்தின் தொலைநோக்கு பார்வையை நனவாக்கிய இந்திய கடற்படை, கடற்படை வடிவமைப்பு பணியகம் மற்றும் கொச்சி கப்பல் கட்டும் தளம் பல வருட கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள். இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பலான விக்ராந்த், இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பிற்கான குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும் என்று அதில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.