தேசிய கல்வி கொள்கை சர்வதேச தரத்திற்கு இந்தியாவின் கல்வியை மாற்றியமைக்கும்- மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்..!!
டெல்லியில் நடைபெற்ற கல்வி உச்சி மாநாட்டில் உரையாற்றிய மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ஜிதேந்திரசிங் கூறியுள்ளதாவது: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த கால முரண்பாடுகளை சரி செய்துள்ளது. தேசிய கல்விக் கொள்கை சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் மிகப்பெரிய சீர்திருத்தம் மட்டுமல்ல முற்போக்கான மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்டது. 21 ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்ப இது உள்ளது. தேசிய கல்வி கொள்கை சர்வதேச தரத்திற்கு இந்தியாவின் கல்வியை மாற்றியமைக்கும். இது மாணவர்களின் திறமை, அறிவு மற்றும் திறனுக்கு முன்னுரிமையை அளிக்கிறது. மனித நேயத்தை உள்ளடக்கிய ஆக்கப்பூர்வமான மற்றும் பலதரப்பட்ட பாடத் திட்டத்தை இது பரிந்துரைக்கிறது. சுவாமி விவேகானந்தரின் மனிதனை உருவாக்கும் கல்வி, ஸ்ரீஅரவிந்தரின் ஒருங்கிணைந்த கல்வி மற்றும் மகாத்மா காந்தியின் அடிப்படைக் கல்வி ஆகியவற்றை தேசிய கல்விக் கொள்கை பிரதிபலிக்கிறது. இன்று சுமார் 40 மில்லியன் இந்திய மாணவர்கள் உயர்கல்வி படித்து உள்ளனர், இது அமெரிக்காவை விட அதிகம். பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகள் தங்கள் பாடத்திட்டத்தில் தொழில்முனைவோர் குறித்து பாடங்களை இணைக்க வேண்டும். இதை அர்த்தமுள்ள முறையில் செய்தால், குறுகிய காலத்தில் அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகத்தை அளிக்கும். முந்தைய கல்விக் கொள்கையின்படி மத்திய கல்வி அமைச்சகத்திற்கு மனித வள அமைச்சகம் என்ற பெயரிடப்பட்டது. மோடி அரசு தற்போது அதை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் என பெயர் மாற்றம் செய்தது. உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீடு தரவரிசையில் இந்தியா முன்னேறியுள்ளது. 2015 ஆம் ஆண்டில் 81 வது இடத்தில் இருந்து 2021 இல் 46 வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.