யாழில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு விட்டு , ஊர்காவற்துறையில் பதுங்கிய இருவர் கைது! (PHOTOS)
யாழ்ப்பாணத்தில் வெவ்வேறு மூன்று இடங்களில் துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் , யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் குருநகர் சின்னக்கடை சந்தை பகுதி ஆகிய மூன்று இடங்களிலும் அண்மைய நாட்களில் துவிச்சக்கர வண்டிகள் திருட்டு போயின.
ஒருவர் மாத்திரமே தனது துவிச்சக்கர வண்டி களவாடப்பட்டது என யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
அவரின் முறைப்பாட்டின் அடிப்படையில் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டிகளை களவாடிய பின்னர் ஊர்காவற்துறை நாரந்தனை பகுதியில் தலைமறைவாகும் இருவர் தொடர்பில் தகவல்கள் கிடைக்க்கப்பெற்று , அங்கு விரைந்த புலனாய்வு பிரிவினர் 37 மற்றும் 38 வயதுடைய இருவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , அவர்கள் இருவரும் யாழில் திருடிய 03 துவிச்சக்கர வண்டிகளை மீட்டனர்.
கைது செய்த இருவரையும் , அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட மூன்று துவிச்சக்கர வண்டிகளையும் ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
யாழில் பரவலாக துவிச்சக்கர வண்டி களவுகள் அதிகரித்துள்ளன. அவை தொடர்பில் உரிமையாளர்களால் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்படாமையால் பொலிஸாரினால் மேலதிக நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை. எனவே முறைப்பாடுகளை மேற்கொள்வதன் ஊடாக திருடர்களை பிடிக்க முடியும் என பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றது.