திருவனந்தபுரத்தில் 30-வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் தொடங்கியது..!!
தென்மாநிலங்களில் நிலவும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மாநில முதல்- மந்திரிகள் பங்கேற்கும் தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் 30-வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை தாங்கினார். இதற்காக அவர் நேற்று மாலையே கேரளா வந்தார்.
இன்று காலை 11 மணியளவில் திருவனந்தபுரத்தை அடுத்த கோவளத்தில் தென்மண்டல கவுன்சில் கூட்டம் தொடங்கியது. 6 மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பிரச்சினை, எல்லை பிரச்சினை, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. அமித்ஷா தலைமையில் நடைபெற்று வரும் இக்கூட்டத்தில் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநில முதல்- மந்திரிகள், தலைமை செயலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்றே சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு விமானம் மூலம் சென்றார். அங்கு அவருக்கு கேரள மற்றும் குமரி மாவட்ட தி.மு.க.வினர் வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சிக்கு பிறகு திருவனந்தபுரம் கோவளத்தில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்றார்.
அங்கு கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனை சந்தித்து பேசினார். அப்போது தமிழக-கேரள நதிநீர் பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதித்தனர். இதில் முல்லை பெரியாறு அணை பிரச்சினை மற்றும் நெய்யாறு, சிறுவாணி அணை பிரச்சினைகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இன்று நடைபெற்று வரும் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்பு கேரளா மற்றும் கர்நாடகா அணை நீரை பயன்படுத்தும் பிற மாநிலங்களின் முதல் மந்திரிகளும் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கிறார்கள். தென்மண்டல கவுன்சில் கூட்டம் முடிவடைந்ததும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று இரவே சென்னை திரும்புகிறார்.