;
Athirady Tamil News

ராகுல் பிடிவாதம் தளர்கிறது- தலைவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு..!!

0

காங்கிரஸ் கட்சிக்கு அக்டோபர் 17-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று சோனியா தலைமையில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவுஎடுக்கப்பட்டது. இதையடுத்து செப்டம்பர் 22-ந் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகிறது. 24-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யப்படுகிறது. 30-ந் தேதி வரை மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டி ஏற்படும் பட்சத்தில் 17-ந் தேதி டெல்லியில் ஓட்டுப்பதிவு நடைபெறும். சுமார் 9 ஆயிரம் பேர் வாக்களிப்பார்கள். 19-ந் தேதி வாக்குகள் எண்ணி முடிவு வெளியிடப்படும். தற்போதைய சூழ்நிலையில் ராகுல் காந்தியை ஏக மனதாக மீண்டும் தேர்ந்தெடுக்க தீவிர முயற்சிகள் நடந்து வருகிறது. மல்லிகார்ஜூன கார்கே, அசோக் கெலாட் உள்பட மூத்த தலைவர்கள் ராகுல் காந்தியை தேர்தலில் போட்டியிட செய்ய தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தலைவர் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்று ராகுல்காந்தி பிடிவாதமாக கூறி வந்தார். பிரியங்காவையும் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கக்கூடாது என்று அவர் தடை விதித்துள்ளார்.

தங்கள் குடும்பத்தை சேராத ஒருவரை தலைவர் பதவியில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ராகுல் கூறினார். இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் ஜி-23 தலைவர்களின் சார்பில் ஒருவரை களம் இறக்க முடிவு செய்துள்ளனர். சசி தரூரை களம் இறக்க எதிர்ப்பாளர்கள் தீர்மானித்திருப்பதாக கூறப்படுகிறது. அவர் காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் ஆதரவு திரட்டி வருவதாக தெரிய வந்துள்ளது. சசி தரூர் தலைவர் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் கடும் போட்டி உருவாகும் என்று கூறப்படுகிறது. இதை தவிர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீவிர முயற்சி களில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே தலைவர் பதவிக்கு வாக்களிப்பவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று எதிர்ப்பாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஆனால் வாக்களிப்பவர்களின் பட்டியலை வெளியிட ராகுல் ஆதரவாளர்கள் தொடர்ந்து மறுத்து வருகிறார்கள்.

இந்த சிக்கல்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் ராகுலை களத்தில் இறக்கியே தீர வேண்டும் என்பதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மீண்டும் சமரச முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பி உள்ள ராகுலிடம் மீண்டும் மூத்த தலைவர்கள் பேசி வருகிறார்கள். எதிர்ப்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் அது காங்கிரசை மேலும் பாதிக்கும் என்று ராகுல் காந்தியிடம் விளக்கமாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ராகுல்காந்தி மனதில் சற்று மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. அவரது பிடிவாதம் தளர்வதாக மூத்த தலைவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். எனவே காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை டெல்லியில் நடக்கும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் ராகுல் உரையாற்ற உள்ளார்.

அதன் பிறகு அவர் கன்னியாகுமரியில் பாத யாத்திரை தொடங்கும் நிகழ்ச்சிகளுக்கு தயாராகிறார். 150 நாட்கள் நடைபெறும் பாத யாத்திரையில் ராகுலின் கவனம் தற்போது உள்ளது. இந்த நிலையில் தலைவர் தேர்தலுக்கான மனு தாக்கலும் அதே கால கட்டத்தில் நடைபெற உள்ளது. ராகுல் தலைவர் பதவிக்கு போட்டியிட முன்வரும் பட்சத்தில் பாத யாத்திரையை ஒருநாள் மட்டும் இடைவெளி விட்டு மனு தாக்கல் செய்ய வருவார் என்று மூத்த தலைவர் ஒருவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார். ராகுலை சமரசம் செய்யும் விஷயத்தில் கடைசி வரை போராடுவோம் என்று மூத்த தலைவர்கள் அசோக் கெலாட், மல்லிகார்ஜூன கார்கே, சல்மான் குர்ஷித் உறுதிபட தெரிவித்தனர். எனவே ராகுல் தலைவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.