;
Athirady Tamil News

நாம் அனைவரும் யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்ற பாதையில் பயணிப்போம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

0

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் அடுத்த கோவளத்தில் இன்று காலை 10 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மாநில முதல்- மந்திரிகள் பங்கேற்கும் 30-வது தென்மாநில கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், தென்மண்டல கவுன்சிலில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்கள் இடம்பெற்றன. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநில முதல்- மந்திரிகள், தலைமை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்றே சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு விமானம் மூலம் சென்றார். அங்கு அவருக்கு கேரள மற்றும் குமரி மாவட்ட தி.மு.க.வினர் வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சிக்கு பிறகு திருவனந்தபுரம் கோவளத்தில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்றார். அங்கு கேரள முதல்- மந்திரி பினராய் விஜயனை சந்தித்து பேசினார். அப்போது தமிழக – கேரள நதிநீர் பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதித்தனர். இதில் முல்லை பெரியாறு அணை பிரச்சினை மற்றும் நெய்யாறு, சிறுவாணி அணை பிரச்சினைகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடந்தது.

இந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இன்று நடந்த தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுவதாக கூறப்பட்டது. இக்கூட்டத்தில் பங்கேற்ற 6 மாநில முதல்-மந்திரிகள் மற்றும் துணை நிலை ஆளுநர்களுக்கு 5 நிமிடங்கள் மட்டுமே பேச அனுமதி வழங்கப்பட்டது. இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- ஜி.எஸ்.டி. அமலாக்கத்துக்கு பிறகு மாநிலங்களுக்கு நிதிசுமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும். ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகைக்கான கால அவகாசத்தை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும். வெள்ள பாதிப்பு உள்ளிட்ட மாநில அரசுகளின் தேவைகளுக்கான நிதியை மத்திய அரசு உடனே விடுவிக்க வேண்டும்.

புதுப்பிக்கதக்க எரிசக்தியை பயன்படுத்துவதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சார சீர்திருத்த சட்டத்தால் நுகர்வோர் பாதிக்கப்படுவார்கள். இதனால் அந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். மேலும் அண்டை மாநிலங்களை இணைக்கும் வகையில் அதிவேக ரெயில் வழித்தடத்தை உருவாக்க வேண்டும். சென்னை, கோவை, மதுரை, தூத்துக்குடி மாவட்டங்களில் நீடித்த நிலையான தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தி வருகிறோம். தென்மாநில மொழிகள் திராவிட மொழி குடும்பத்தை சேர்ந்தவை என நிரூபிக்கப்பட்டு உள்ளது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்ற பாதையில் பயணிப்போம். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையில் தமிழ்நாடு உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.