பாரதிய ஜனதா கட்சி பலவீனமாக உள்ள 78 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் தீவிர கவனம் செலுத்த முடிவு..!!
2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான ஆரம்ப வேலைகளை பா.ஜனதா கட்சி தொடங்கி விட்டது. சில மாநிலங்களில் குறிப்பிட்ட தொகுதிகளை தேர்வு செய்து அங்கு தற்போது இருந்தே தேர்தல் பணிக்கான ஆரம்ப வேலைகளை செய்து வருகிறது. இந்த தொகுதிகளுக்கு மத்திய மந்திரிகளை பொறுப்பாளர்களாக நியமித்து அங்கு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்துவதோடு, கடந்த 8 ஆண்டுகால பா.ஜனதா ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்து சொல்வது குறித்தும் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர்.
இதற்கிடையே பா.ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு மாதமும் வியாழக்கிழமை தோறும் நடைபெறும் இந்த கூட்டத்தில் தேர்தல் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் அனைத்து பொதுச்செயலாளர்கள் கலந்து கொண்ட சமீபத்திய கூட்டத்தில் பலவீனமான வாக்குச்சாவடிகளை பலப்படுத்தும் திட்டம் குறித்தும், அந்த ஓட்டுச்சாவடிகளில் தீவிர கவனம் செலுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும் கட்சி பலவீனமாக உள்ள வாக்குச்சாவடிகள், கடந்த 3 தேர்தல்களில் அங்கு பதிவான வாக்குப்பதிவு முறைகள் மற்றும் அங்கு பா.ஜனதா கட்சிக்கு எவ்வளவு வாக்குகள் கிடைத்தது என்பதை பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அந்த வகையில் நாட்டின் பல்வேறு பகுதியில் பா.ஜனதா கட்சிக்கு பலவீனமான 78,000 வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடி பகுதிகளில் தீவிர கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அவை ஒவ்வொன்றிலும் குறைந்தது 30 புதிய உறுப்பினர்களை கட்சிக்கு சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் எம்.பி.க்களால் நியமிக்கப்பட்ட தொண்டர்கள் குழு அனைத்து சாவடிகளுக்கும் சென்று வாக்காளர்களுடன் கலந்துரையாடுவது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ‘சரல்’ என்ற சிறப்பு மென்பொருளில் நிர்வாகிகள் தங்களது அறிக்கைகளை வலியுறுத்தினர். மேலும் வருகிற 17-ந் தேதி பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பா.ஜனதா பொதுச்செயலாளர் (அமைப்பு) சந்தோஷ் தலைமையில் பா.ஜனதா ஆளும் அனைத்து மாநில பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.