;
Athirady Tamil News

35-ம் கட்ட கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது..!!

0

திருப்பூர் மாவட்டத்தில் நாளை 4-ந் தேதி, 35ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. மாவட்டம் முழுவதும் 1,341 இடங்களில் தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறை மூலம் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் 12 முதல் 14 வயது வரை, 15 முதல் 18 வயது வரை இளம்சிறார்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் 35ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நாளை 4-ந் தேதி நடக்கிறது.திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 98.92 சதவீதம் பேர் முதல் தவணையும், 79.06 சதவீதம் பேர் இரண்டாம் தவணையும், 15 முதல் 18 வயது பிரிவில், 88.64 சதவீதம் பேர் முதல் தவணையும், 75.18 சதவீதம் பேர் இரண்டாம் தவணையும், 12 முதல் 14 வயது பிரிவில் 90.44 சதவீதம் பேர் முதல் தவணையும், 66.84 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் அல்லது 26 வாரம் கடந்த, 18 வயதுக்கு மேற்பட்டவர் அனைவருக்கும் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி இம்முகாமில் செலுத்தப்படும்.

இந்த பூஸ்டர் தடுப்பூசி வருகிற 30 -ந் தேதி வரை மட்டுமே இலவசமாக அனைவருக்கும் செலுத்தப்படும். மாவட்டத்தில் ஒரு நபர் கூட விடுபடாமல் கிராமங்களிலும், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சியில் இத்தடுப்பூசி கிடைத்திட தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ளது.

அரசு மருத்துவ கல்லூரி, தலைமை அரசு மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், ஊராட்சி அலுவலகம், பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட மாவட்டத்தின் 1,341 இடங்களில் முகாம் நடக்கிறது. பல்வேறு துறைகளை சேர்ந்த 2,681 பணியாளர் மற்றும் தன்னார்வலர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட உள்ளனர்.அனைத்து பகுதியிலும் முகாம்களில், காலை 7மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படும். இந்த நல்வாய்ப்பினை இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர் கட்டாயம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.