ஆசியக் கிண்ணம்: ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இலங்கை !!
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் இன்று நடைபெற்ற ஆப்கானிஸ்தானுடனான சுப்பர் 4 சுற்றுப் போட்டியில் இலங்கை வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையணியின் தலைவர் தசுன் ஷானக, தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், ரஹ்மனுல்லாஹ் குர்பாஸின் 84 (45), இப்ராஹிம் ஸட்ரானின் 40 (38), நஜிபுல்லா ஸட்ரானின் 17 (10), ரஷீட் கானின் 09 (07) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. பந்துவீச்சில், டில்ஷான் மதுஷங்க 2/37 [4], மகேஷ் தீக்ஷன 1/29 [4], அசித பெர்ணாண்டோ 1/34 [4], வனிடு ஹஸரங்க 0/23 [4] என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 176 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை, குசல் மென்டிஸ், பதும் நிஸங்க மூலம் வேகமான ஆரம்பத்தைப் பெற்ற நிலையில், 36 (19) ஓட்டங்களுடன் நவீன்-உல்-ஹக்கிடம் மென்டிஸ் வீழ்ந்தார். சிறிது நேரத்தில் 35 (28) ஓட்டங்களுடம் முஜீப் உர் ரஹ்மானிடம் நிஸங்கவும், குறிப்பிட்ட இடைவெளிகளில் சரித் அஸலங்க, ஷானக ஆகியோர் அணித்தலைவர் மொஹமட் நபி, முஜீப்பிடம் வீழ்ந்தனர்.
பின்னர் வெற்றியிலக்கை நோக்கி நகர்த்திச் சென்ற தனுஷ்க குணதிலக 33 (20) ஓட்டங்களுடன் ரஷீட் கானிடமும், பானுக ராஜபக்ஷ 31 (14) ஓட்டங்களுடன் நவீனிடம் வீழ்ந்தபோதும், ஹஸரங்கவின் ஆட்டமிழக்காத 16 (09), சாமிக கருணாரத்னவின் ஆட்டமிழக்காத 05 (02) ஓட்டங்களுடன் 19.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இலங்கை வென்றது.