நாட்டின் எதிர்காலத்திற்காக, தென் மாநிலங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்- அமித் ஷா..!!
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற 30வது தென் மண்டல கவுன்சில் கூட்டத்திற்கு தலைமை வகித்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட ‘இல்லந்தோறும் மூவண்ணக் கொடி’ பிரச்சாரத்தில், நாட்டு மக்கள் ஜாதி, மதம் கடந்து , தங்கள் வீடுகளில் மூவண்ணக் கொடியை ஏற்றி ஒற்றுமை மற்றும் தேசபக்திக்கு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார்கள். விடுதலையின் அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாடிய அனைத்து மாநிலங்களுக்கும் நன்றி. நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
தென்னிந்தியா மீது பிரதமர் மோடிக்கு சிறப்பு அக்கரை உள்ளது, அதனால்தான் முக்கியத் துறைமுகங்களை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கினார். இவற்றில் ரூ. 76,000 கோடி மதிப்பிலான 108 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. 1,32,000 கோடி மதிப்பிலான 98 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தென் மாநிலங்களில் மீன்வள உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதித் திட்டத்திற்கு ரூ.4,206 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் 56 திட்டங்களுக்கு மாநிலங்களில் துறைமுகங்கள் மற்றும் மீன்வளத்தின் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ. 2,711 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
தென் மண்டல கவுன்சிலின் அனைத்து உறுப்பு மாநிலங்களும் நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்சனைகளுக்கு கூட்டுத் தீர்வு காண வேண்டும். பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான மோதல்களை சுமுகமாகத் தீர்த்து வைப்பது மண்டல கவுன்சில் கூட்டத்தின் முக்கிய நோக்கம். நாட்டின் அனைத்துத் துறை வளர்ச்சிக்காக, பிரதமர் மோடி டீம் இந்தியா என்ற கருத்தை முன் வைத்துள்ளார். அனைத்து மாநிலங்களும் இணைந்து டீம் இந்தியாவை உருவாக்குகின்றன.
மத்திய உள்துறை அமைச்சகம் போதைப்பொருள் பிரச்சனையை மிகக் கண்டிப்புடன் ஒடுக்க முயற்சி வருகிறது. ஒவ்வொரு ஐந்து கிலோமீட்டருக்கும் ஒரு வங்கிக் கிளை வேண்டும் என்பதே மோடி அரசின் இலக்கு. இதற்காக தென் மாநிலங்கள் தங்கள் பகுதியில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் வங்கி வசதிகளை ஏற்படுத்த வேண்டும். வங்கிகளின் கிளைகளை திறக்க வேண்டும். இது அரசு திட்டங்களின் பலன்கள் நேரடியாக பயனாளிகளுக்கு வழங்க உதவும். கூட்டுறவு நிறுவனங்களை வலுப்படுத்தவும் முயற்சி எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.