;
Athirady Tamil News

அதிகாரிகளுக்கு தெரியாமல் ஆக்கிரமிப்புகள் நடக்க வாய்ப்பு இல்லை- சென்னை உயர்நீதிமன்றம்..!!

0

திருவள்ளூர் மாவட்டம், அயனம்பாக்கம் கிராமத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தங்கள் தரப்பின் விளக்கத்தை கேட்காமலேயே ஆக்கிரமிப்பை அகற்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நீர்நிலைகளை ஆக்கிரமித்து அரசு சாலை அமைத்துள்ளது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- நிலம் தங்களுக்கு சொந்தமானது என்பதை மனுதாரர்களால் நிரூபிக்க முடியவில்லை. பொதுமக்கள் மட்டுமல்ல, நீர்நிலை ஆக்கிரமிப்பில் அரசே ஈடுபட்டாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்.

குடிநீர் ஆதாரமாக மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க தவறுவதால் தான், ஒருபக்கம் வறட்சியும், மறுபக்கம் வெள்ளத்தையும் எதிர்கொள்கிறோம். நீர்நிலையை பாதுகாப்பது அரசின் கடமை. அதிகாரிகளுக்கு தெரியாமல் ஆக்கிரமிப்புகள் நடக்க வாய்ப்பு இல்லை. இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மை பாதுகாக்கும். சுற்றுச்சூழலை பாதுகாக்க தவறியதால் தான் புவி வெப்பமயமாதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.