சிறுநீரக பிரச்சினை, தோல் தொற்று நோயால் அவதிப்படும் நித்யானந்தா?- இலங்கையில் தஞ்சம் கேட்டதன் பின்னணி தகவல்..!!
பாலியல், கடத்தல் வழக்குகளில் கர்நாடகா, குஜராத் போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டிற்கு தப்பி ஓடினார். அவர் ஆஸ்திரேலியா அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி அதற்கு கைலாசா நாடு என பிரகடனப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் சமூக வலைதளங்களில் அடிக்கடி வீடியோக்கள் வெளியிட்டு பக்தர்கள் மத்தியில் சத்சங்க உரையாற்றி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்துவிட்டதாக தகவல் பரவியது. உடனே அதற்கு மறுப்பு தெரிவித்து பதிவிட்ட நித்யானந்தா, தான் சமாதி நிலையில் இருப்பதாக கூறினார். சுமார் 3 மாதங்களுக்கு பிறகு குருபூர்ணிமா நாளில் மீண்டும் நேரலையில் தோன்றி சத்சங்க உரையாற்றினார். அப்போது, நான் மறுபிறவி எடுத்து வந்துள்ளதாக கூறினார்.
இந்நிலையில் நித்யானந்தாவுக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாகவும், அதற்காக அவருக்கு உடனடியாக அரசியல் புகழிடம் வழங்குமாறு இலங்கை அதிபர் ரனில் விக்ரமசிங்கேவுக்கு நித்யானந்தா சார்பில் கைலாசா நாட்டின் வெளியுறவு மந்திரி நித்ய பிரேமாத்மா ஆனந்தசுவாமி என்பவர் கடிதம் எழுதியதாக தகவல்கள் வெளியானது. அந்த கடிதத்தில் நித்யானந்தாவுக்கு தேவையான எந்த மருத்துவ சாதனத்தையும் வாங்குவதற்கு கைலாசா நாடு தயாராக உள்ளதாகவும், அவருக்கு இலங்கையில் ஆகும் மருத்துவ செலவுகளை கைலாசா நாடு ஏற்கும் எனவும், அதற்கு நன்றி கடனாக கோடிக்கணக்கில் மதிப்புள்ள மருத்துவ சாதனங்களை உங்கள் மக்கள் நலனுக்கு விட்டு செல்வோம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. நித்யானந்தா சமீபகாலமாக வீடியோவில் நேரலையில் தோன்றி பேசியபோதும் கூட தனது உடல்நிலையில் என்ன பிரச்சினை என்பதை வெளிப்படையாக கூறவில்லை.
அவர் நீண்டகாலமாக சிறுநீரக பிரச்சினையால் தவித்து வருவதாகவும், மொரீசியஸ் டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தும் அவரது உடலில் பெரிய முன்னேற்றம் இல்லை எனவும் கூறப்படுகிறது. மேலும் தோல் சம்பந்தப்பட்ட சில தொற்று நோய்களாலும் அவர் அவதிப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சிகிச்சைகளுக்காக தான் அவர் மருத்துவ உதவி கேட்டு இலங்கையை நாடியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது நித்யானந்தா பக்தர்களுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மீண்டும் நித்யானந்தாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதா? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.