ஐதராபாத் 75-ம் ஆண்டு விடுதலை தினம்: வருகிற 17-ந்தேதி அமித்ஷா பங்கேற்கிறார்..!!
நாடு சுதந்திரம் அடைந்து 1947-ம் ஆண்டு 15-ந்தேதிக்கு பின்னரும் பல சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைய மறுத்தன. அந்த சமஸ்தானங்களை அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் ராணுவ நடவடிக்கை மூலம் இந்தியாவுடன் இணைத்தார். அப்படி ராணுவ நடவடிக்கை மூலம் இணைக்கப்பட்ட ஒரு சமஸ்தானம்தான் ஐதராபாத். அந்த மாகாணத்தை அப்போது ஐதராபாத் நிஜாம் ஆண்டு வந்தார். சர்தார் வல்லபாய் படேலின் ராணுவ நடவடிக்கை காரணமாக 1948ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி ஐதராபாத் விடுதலை பெற்றது.
அப்போதைய ஐதராபாத் சமஸ்தானத்தின் கீழ் இப்போதைய தெலுங்கானா மாநிலம் முழுவதும், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் சில பகுதிகளும் இருந்தன. நிஜாமின் பிடியில் இருந்து ஐதராபாத் விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி, வரும் 17ம் தேதியில் இருந்து ஓராண்டு ஐதராபாத் விடுதலை தினத்தை கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான தொடக்க விழா ஐதராபாத்தில் வரும் 17ம் தேதி நடக்க உள்ளது. அதில் மத்திய மந்திரி அமித்ஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்த தகவலை மத்திய கலாச்சார துறை மந்திரி கிஷன் ரெட்டி தெரிவித்தார்.
இது தொடர்பாக, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், கர்நாடகா முதல்வர் பசவ ராஜ் பொம்மை, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோருக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா விடுதலை பெற்ற ஓராண்டு கழித்துதான் தெலுங்கானா மாநிலத்தை முழுமையாகவும், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவின் சில மாவட்டங்களையும் உள்ளடக்கிய ஐதராபாத் சமஸ்தானம் விடுதலை பெற்றது. நிஜாமின் கொடுங்கோன்மை ஆட்சியில் இருந்து ஐதராபாத் 1948ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி விடுதலை பெற்றது.
ஐதராபாத் விடுதலைபெற்று 75 ஆண்டுகள் ஆவதை ஓராண்டு முழுவதும் விழாவாகக் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடக்கும் இந்த விழாவில் பங்கேற்குமாறு உங்களை அழைக்கிறோம். ஐதராபாத் விடுதலை பெற்ற வரலாற்றை இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடனும், இந்த போராட்டம் தொடர்பான எதிர்ப்பு, வீரம், தியாகத்தை பற்றியும் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடனும் இந்த கொண்டாட்டம் நடக்க உள்ளது, இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார். ஐதராபாத் விடுதலை நாள் தெலுங்கானா விடுதலை நாள் என்றும் அழைக்கப்படுகிறது.