டுவிட்டரில் மட்டுமே காங்கிரசை பார்க்க முடிகிறது- குலாம்நபி ஆசாத் ஆவேசம்..!!
காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த குலாம்நபி ஆசாத் கடந்த மாதம் 26-ந்தேதி அந்த கட்சியில் இருந்து விலகினார். 73 வயதான அவர் காங்கிரஸ் கட்சி மூலம் ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி, மத்திய மந்திரி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தார். ராகுல் காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குலாம்நபி ஆசாத் காங்கிரசில் இருந்து வெளியேறினார்.
அவர் ராகுலை கடுமையாக சாடி இருந்தார். குலாம்நபி ஆசாத்துக்கு ஆதராக காஷ்மீரில் பல காங்கிரஸ் தலைவர்கள் விலகினார்கள். காங்கிரசில் இருந்து விலகிய அவர் புதிய கட்சியை தொடங்கி பா.ஜனதாவுடன் சேர்ந்து தேர்தலை சந்திப்பார் என்றும் கூறப்பட்டது. புதிய கட்சியை விரைவில் தொடங்க இருப்பதாகவும் அவர் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இந்நிலையில், ஜம்முவில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக் கெள்வதற்காக குலாம்நபி ஆசாத் டெல்லியில் இருந்து இன்று காலை ஜம்மு சென்றார். அவருக்கு அங்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர், பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற குலாம்நபி ஆசாத் மக்களிடையே பேசியதாவது:-
காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் இப்போது பேருந்துகளில் சிறைக்குச் செல்கிறார்கள். டிஜிபி, கமிஷனர்களை தொடர்புக் கொண்டு பெயரை எழுதிக் கொடுத்துவிட்டு ஒரு மணி நேரத்திற்குள் வெளியேறிவிடுவார்கள். அதனால்தான் காங்கிரஸால் வளர முடியவில்லை. காங்கிரஸ் நம் ரத்தத்தால் உருவாக்கப்பட்டது. கணினியால் அல்ல. டுவிட்டரால் அல்ல.
ஆனால் காங்கிரஸ் அணுகல் கணினிகள் மற்றும் ட்வீட்களில் மட்டுமே உள்ளது. அதனால்தான் காங்கிரஸை களத்தில் எங்கும் காண முடியவில்லை. எனது கட்சி முழு மாநில அந்தஸ்து, நிலம் மற்றும் பூர்வீக குடியேற்ற உரிமையை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்தும். எனது கட்சிக்கான பெயரை நான் இன்னும் முடிவு செய்யவில்லை. ஜம்மு காஷ்மீர் மக்கள் கட்சியின் பெயரையும் கொடியையும் தீர்மானிப்பார்கள். அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எனது கட்சிக்கு இந்துஸ்தானி பெயரைச் சூட்டுவேன். இவ்வாறு அவர் கூறினார்.