மணிப்பூர் சட்டசபையில் பா.ஜனதா பலம் 37-ஆக உயர்வு..!!
பீகார் மாநிலத்தில் கடந்த மாதம் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகிய ஐக்கிய ஜனதாதளம், லல்லு பிரசாத் யாதவ்வின் ராஷ்டிரிய ஜனதாதளம் மற்றும் காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் மீண்டும் பதவி ஏற்றார். அவர் பா.ஜனதா மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறினார். இந்த நிலையில் நிதிஷ் குமாருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மணிப்பூரில் ஐக்கிய ஜனதாதளத்தை சேர்ந்த 5 எம்.எல்.ஏக்களை பா.ஜனதா தன் பக்கம் இழுத்துள்ளது. இக்கட்சியில் மொத்தம் 6 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதில் ஜாய்கிஷன் சிங், நுதிர் சங் துர்சனதே, அசத் உதின், தங்ஜாம் அருண் குமார், கவுதே ஆகிய 5 பேர் பா.ஜனதாவில் இணையப் போவதாக அறிவித்து உள்ளனர். டெல்லிக்கு சென்ற அவர்களை மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன்சிங் உற்சாகமாக வரவேற்றார்.
மீதமுள்ள ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏவும் விரைவில் அக்கட்சியை விட்டு விலகி பா.ஜ.க.வில் சேருவார் என கூறப்படுகிறது, மணிப்பூரில் மொத்த எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 60 ஆகும். தற்போது 5 எம்.எல்,ஏக்கள் பா.ஜ.கவில் சேர்ந்து உள்ளதால் சட்டசபையில் ஆளும் பா.ஜனதா கட்சி உறுப்பினர்களின் பலம் 37-ஆக உயர்ந்து உள்ளது. பா.ஜனதாவின் இந்த நடவடிக்கைக்கு ஐக்கிய ஜனதா தளம் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தேசிய தலைவர் ரஞ்சன்சிங் கூறியதாவது:- டெல்லி, மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பா.ஜனதா என்ன செய்ததோ அதைதான் மணிப்பூரிலும் செய்து உள்ளது. எங்கள் எம்..எல்.ஏ.க்களை பேரம் பேசி விலைக்கு வாங்கி உள்ளனர். 2023-ம் ஆண்டு தேசிய அளவில் எங்கள் கட்சி மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.