சிறைகளை அதிநவீனமாக மாற்ற சட்டம் கொண்டு வரப்படும்- மத்திய உள்துறை மந்திரி பேச்சு..!!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள கன்காரியாவில் 6வது இந்திய சிறைப்பணிகள் கூட்டத்தை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: நமது எல்லைகளின் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக நாடு முழுவதும் ஒரு பொதுவான திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டு பாதுகாப்பில் சிறை நிர்வாகமும் ஒரு முக்கிய அங்கம், அதை நாம் புறக்கணிக்க முடியாது.
சிறைச்சாலைகளை சமூகம் பார்க்கும் விதத்திலும் மாற்றம் தேவை. தண்டனை இல்லை என்றால் பயம் இருக்காது, பயம் இல்லை என்றால் ஒழுக்கம் இருக்காது, ஒழுக்கம் இல்லையென்றால் ஆரோக்கியமான சமுதாயத்தை கற்பனை செய்து பார்க்க முடியாது. கைதிகள் விடுதலைக்கு பிறகு சமூகத்திற்கு அவர்களை சிறந்த மனிதர்களாக தர வேண்டியது சிறை நிர்வாகத்தின் பொறுப்பாகும். மத்திய அரசு மாதிரி சிறைச் சட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இது பிரிட்டிஷ் காலத்தில் இருந்து தொடரும் சட்டத்தில் தேவையான மாற்றங்களைக் கொண்டுவரும். மாநிலங்களுடன் விரிவாக விவாதிக்கப்பட்டு, அடுத்த 6 மாதங்களுக்குள், அனைத்து சிறைகளையும் தொழில்நுட்ப ரீதியாக அதிநவீனமாக மாற்றும் வகையில் மாதிரி சிறைச் சட்டம் கொண்டு வரப்படும். ஒவ்வொரு மாவட்ட சிறைகளையும் நீதிமன்றங்களுடன் இணைக்கும் வகையில் காணொலி வசதியை மாநிலங்கள் வழங்க வேண்டும். தீவிரவாதிகள் மற்றும் போதைப்பொருள் குற்றங்களுக்காக தண்டனை பெற்ற கைதிகளை தனித்தனியாக வைக்க ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மத்திய உள்துறை செயலாளர் உள்பட பல உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.