அதிவேகம், சீட் பெல்ட் அணியவில்லை ; டாடா குழும முன்னாள் தலைவர் உயிரிழப்பு குறித்து போலீசார் புதிய தகவல்..!!
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி. இவர் நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து சொகுசு காரில் மராட்டியம் நோக்கி வந்துகொண்டிருந்தார். அந்த காரை மும்பையை சேர்ந்த மகப்பேறு டாக்டர் அனகிதா பண்டொலி (வயது 55) என்பவர் ஓட்டினார். காரின் முன் இருக்கையில் சைரஸ் மிஸ்த்ரி பயணித்துள்ளார். காரில் அனகிதாவின் கணவர் டரியஸ் பண்டொலி மற்றும் அவரது சகோதரர் ஜிஹாங்கிர் பண்டொலி என மொத்தம் 4 பேர் பயணித்துள்ளனர். நேற்று மதியம் 2.30 மணியளவில் மராட்டியத்தின் பல்ஹர் மாவட்டம் ஷரொடி சோதனை சாவடி அருகே சைரஸ் மிஸ்த்ரி பயணித்த கார் வந்தபோது எதிர்பாராத விதமாக விபத்துள்ளனர். சாலை தடுப்பு மீது வேகமாக மோதிய கார் விபத்துள்ளானது.
இந்த கோர விபத்தில் காரில் பயணித்த சைரஸ் மிஸ்திரி மற்றும் ஜிஹாங்கிர் பண்டொலி என 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த அனகிதா பண்டொலி மற்றும் அவரது கணவர் டரியஸ் பண்டொலி படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அதிவேகமாக காரை ஒட்டியது மற்றும் டிரைவர் எடுத்த தவறான முடிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்த சைரஸ் மிஸ்த்ரி மற்றும் ஜிஹாங்கிர் பண்டொலி என 2 பேரும் சீட் பெல்ட் அணியவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இந்த விபத்து தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.