விமான நிலையங்களில் 3,049 சி.ஐ.எஸ்.எப். பாதுகாப்பு பணியிடங்கள் ரத்து – தனியார் செக்யூரிட்டிகளை நியமிக்க முடிவு..!!
நாடு முழுதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு பணியில் இருந்து, சி.ஐ.எஸ்.எப்., வீரர்களுக்கான 3,000 பணியிடங்கள் ரத்து செய்யப்படுகின்றன. இதற்கு பதிலாக தனியார் ‘செக்யூரிட்டி’களை பணியில் அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 1999 ஆம் ஆண்டு ‘இந்தியன் ஏர்லைன்ஸ்’ விமானம், பயங்கரவாதிகளால் ஆப்கானிஸ்தானின் காந்தஹாருக்கு கடத்தப்பட்டது. இந்த சம்பவத்திற்குப் பிறகு விமான நிலையங்களில் பாதுகாப்பு பணி, சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கப் பட்டது. மொத்தம், 1.63 லட்சம் வீரர்கள் உள்ள இந்தப் படையைச் சேர்ந்த 33 ஆயிரம் பேர், நாடு முழுதும் உள்ள, 65 விமான நிலையங்களின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில் விமான நிலையங்கள் பாதுகாப்பு தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் இணைந்து 2018-2019ல் புதிய செயல் திட்டத்தை வகுத்தது. மேலும் விமான நிலையங்களில் சி.ஐ.எஸ்.எப்., வீரர்களின் பாதுகாப்பு தேவை குறித்து சமீபத்தில் ஆராயப்பட்டது.
அதன்படி விமான நிலையங்களில் சில இடங்களில் சி.ஐ.எஸ்.எப்., வீரர்களின் தேவை இல்லாத இடங்கள் அடையாளம் காணப்பட்டன. அதன்படி மொத்தம், 3,049 இடங்களில் படை வீரர்களின் தேவை இல்லை என்று முடிவு செய்யப்பட்டது. இந்த இடங்களில் தனியார் செக்யூரிட்டி நிறுவனங்களைச் சேர்ந்தோரை பணியில் அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வரிசையை ஒழுங்குபடுத்துவது போன்ற பணிகளுக்கு படை வீரர்கள் தேவையில்லை என்பதால், அதுபோன்ற பணியிடங்களில், 1,924 தனியார் செக்யூரிட்டிகளை பணி அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பயணியரை பரிசோதிப்பது, விமான நிலையத்தின் பாதுகாப்பு போன்றவற்றில் படை வீரர்களே ஈடுபடுத்தப்படுவர். தனியார் செக்யூரிட்டிகளும், படையின் விதிகளுக்கு உட்பட்டே, அதன் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பர். இந்த மாற்றத்தால், பாதுகாப்புக்கான செலவு குறையும். அதன் பலன் பயணியருக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.