பலத்த போலீஸ் பாதுகாப்புடன்விநாயகர் சிலை ஊர்வலம்..!!
பரமத்திவேலூரில் ஒவ்வொரு வருடமும் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு 5-ம் நாள் ஊர்வலமாக எடுத்து சென்று பரமத்திவேலூர் காசி விஸ்வநாதர் கோயில் காவிரி கரையில் உள்ள காவிரி ஆற்றில் கரைப்பது வழக்கம். மேலும் நாமக்கல் மாவட்டம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் 100 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு ஆங்காங்கே நீர் நிலைகளில் கரைக்கப்பட்டது. பரமத்திவேலூர் கடைவீதி கார்னரில் நடைபெற்ற இந்து எழுச்சி ஒற்றுமை பெருவிழா நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மோகனூர் ஒன்றிய தலைவர் சரவணன் தலைமை வகித்தார்.கபிலர்மலை ஒன்றிய பொதுச்செயலாளர் மணிராஜ் வரவேற்றார்.
பரமத்தி ஒன்றிய தலைவர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.இந்து முன்னணி திருச்சி கோட்ட பேச்சாளர் வக்கீல் இளங்குமார் சம்பத், மாவட்ட தலைவர் கலைவாணன், மாவட்ட பொதுச்செயலாளர் கோபிநாத், மாவட்ட செயலாளர்கள் சரவணன், ஜெகதீசன், மாவட்ட பொருளாளர் பிரபாகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தை பா.ஜ.க ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு நாமக்கல் மாவட்ட தலைவர் சுபாஷ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
விநாயகர் ஊர்வலம் கடைவீதி கார்னரில் இருந்து மேளதாளம் முழங்க தொடங்கி திருவள்ளுவர் சாலை, பழைய பை-பாஸ் சாலை, சந்தை பகுதி, பேட்டை பஞ்சமுக ஹேரம்ப விநாயகர் கோயில், பஸ்நிலையம், அண்ணா சாலை மற்றும் காவிரி சாலை வழியாக காசிவிஸ்வநாதர் கோயில் அருகில் உள்ள காவிரியாற்றில் கரைக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண்தேஜஸ்வி உத்தரவின் படி பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் தலைமையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.