பொருளாதார வளர்ச்சியில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி இந்தியா சாதனை- பிரதமர் மோடி பெருமிதம்..!!
ஆசிரியர் தினத்தையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: நேர்மறை சிந்தனையுடன் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஆசிரியர்கள் உழைக்க வேண்டும். ஆசிரியரின் பங்கு என்பது மாணவர்களின் வாழ்வில் வெளிச்சத்தை ஏற்படுத்தி அவர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் கற்பிப்பதாகும். மாணவர்களின் எதிர்காலம் இன்றைய ஆசிரியர்கள் மூலம் உருவாக்கப்படுகிறது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களிடையே மோதலையும் முரண்பாடுகளையும் களைவது முக்கியம். பள்ளி, சமூகம் மற்றும் வீடுகளில் மாணவர்கள் மோதலை கடைப்பிடிக்கக் கூடாது. மாணவர்களின் நலன் கருதி, ஆசிரியர்களும் மாணவர்களின் குடும்பத்தினரும் ஒருங்கிணைந்த அணுகுமுறையை மேற்கொள்வது அவசியம். விருப்பு வெறுப்புகளை கடைப்பிடிக்காமல் அனைத்து மாணவர்களையும், சமமாக நடத்த வேண்டும். புதிய கல்விக் கொள்கை சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. மகாத்மா காந்தி பகவத் கீதையை பலமுறை படித்து, ஒவ்வொரு முறையும் ஒரு புதிய அர்த்தத்தைக் கண்டறிந்ததார். மாணவர்களின் வாழ்வை அடிப்படையாகக் கொண்ட தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும். இதை அமல்படுத்துவதில் ஆசிரியர்களுக்கு முக்கிய பொறுப்பு உள்ளது. இக்கொள்கையை உருவாக்கியதில் ஆசிரியர்கள் பெரும் பங்கு வகித்தனர். உலகில் பொருளாதார வளர்ச்சியில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்ததன் மூலம் இந்தியா சாதனை படைத்துள்ளது. சுமார் 250 வருடங்களுக்கு மேலாக இந்தியாவை ஆட்சி செய்தவர்களை பொருளாதாரத்தில் ஆறாம் இடத்திற்கு தள்ளி, நாம் ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.