மதச்சார்பற்ற நாட்டில் அரசுப்பள்ளியில் மத ரீதியிலான உடை அணியலாமா? – ஹிஜாப் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கேள்வி..!!
கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் கடந்த பிப்ரவரி மாதம் கூறியது. ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் (தலைப்பகுதியை மூடும் உடை) அணிந்து வந்தனர். இதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அந்த மாணவிகள் பர்தா (உடல் முழுவதும் மூடும் உடை) அணிந்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கல்லூரியில் படிக்கும் இந்து மதத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளில் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்துவர தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்குத்தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு பள்ளி, கல்லூரி உள்பட கல்வி நிலையங்களில் மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகள் அணிய தடை விதித்த கர்நாடக அரசின் உத்தரவு செல்லும் என உத்தரவிட்டது. ஹிஜாப் இஸ்லாமிய மதத்தின் இன்றியமையாத நடைமுறை அல்ல என்று கூறிய ஐகோர்ட்டு, கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, இஸ்லாமிய மத மாணவிகள், இஸ்லாமிய மத அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தன. இந்த வழக்கில் விளக்கம் அளிக்க கர்நாடக அரசுக்கு கடந்த 29-ம் தேதி நோட்டீஸ் அனுப்பிய சுப்ரீம் கோர்ட்டு வழக்கை 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்நிலையில், கல்வி நிலையங்களில் தடை விதித்து கர்நாடக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஹிமந்த் குப்தா மற்றும் சுதான்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் போது நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்கள் பின் வருமாறு: – மத ரீதியில் நீங்கள் எந்த நடைமுறையை பின்பற்ற விரும்புகிறீர்களோ அதை பின்பற்ற உங்களுக்கு உரிமை இருக்கலாம். ஆனால், அந்த நடைமுறையை பின்பற்றி அந்த உரிமையை சீருடை நிச்சயம் அணியவேண்டிய பள்ளியில் கொண்டு வருவீர்களா? அது தான் கேள்வி.
மாநில அரசு கல்வி உரிமையை பறிக்கவில்லை. பரிந்துரைக்கப்பட்டுள்ள சீருடையில் மாணவர்கள் வரமாறு தான் மாநில அரசு கூறுகிறது. ஹிஜாப் அணிய உங்களுக்கு மத ரீதியில் உரிமை இருக்கலாம். ஆனால் அந்த உரிமையை சீருடை நிச்சயம் அணியவேண்டிய கல்வி நிறுவனத்திற்குள் கொண்டு வரலாமா? ஹிஜாப் இஸ்லாமிய மதத்தின் இன்றியமையாத நடைமுறையா? இல்லையா? என்ற பிரச்சினையை சற்று மாற்றி அமைக்கலாம். அது இன்றியமையாத நடைமுறையாக இருக்கலாம் அல்லது இன்றியமையாத நடைமுறையாக இல்லாமலும் இருக்கலாம். நாங்கள் என்ன கூறுகிறேம் என்றால், அரசு கல்வி நிறுவனத்தில் (பள்ளி, கல்லூரி) நீங்கள் உங்கள் மத ரீதியிலான உடையை அணியலாமா? என்பது தான். ஏனென்றால், இந்திய அரசியலமைப்பின் முகப்புரை நமது நாடு மதச்சார்பற்ற நாடு என்கிறது. ஆனால், நீங்கள் மத ரீதியிலான உடை அரசு நடத்தும் கல்வி நிறுவனத்தில் அணியப்படவேண்டும் என கூறுகிறீர்கள். இது விவாதத்திற்கு உரியது. மாணவிகள் அவர்கள் விருப்பப்படி மிடி, மினிஸ் உள்ளிட்ட ஆடை அணிந்து வரலாமா?’ என நீதிபதிகள் கூறினார். அனைத்து தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் வழக்கை நாளை மதியம் 2 மணிக்கு ஒத்தி வைத்தனர்.