இலங்கைக்கு மியன்மார் அரிசி நன்கொடை !!
170 மில்லியன் ரூபாய் (அண்ணளவாக 463,215 அமெரிக்க டொலர்) பெறுமதியான 1000 மெட்ரிக் தொன் மியன்மார் வெள்ளை அரிசியை இலங்கைக்கு மியன்மார் அரசாங்கம் நன்கொடையாக வழங்கியுள்ளதாக யாங்கூனில் உள்ள இலங்கைத் தூதரகம், இன்று (06) தெரிவித்துள்ளது.
மியன்மாரின் யாங்கூனில் உள்ள ஆசிய உலக துறைமுக முனையத்தில் கடந்த 2ஆம் திகதி நடைபெற்ற கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
மியன்மார் மத்திய வர்த்தக அமைச்சர் யு. ஆங் நைங் ஓவினால், மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டாரவிடம் அரிசித் தொகுதி உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இச்சலுகையை ஏற்றுக்கொண்ட தூதுவர், சவாலான நேரத்தில் இலங்கைக்கு 1000 மெட்ரிக் தொன் அரிசியை நன்கொடையாக வழங்கியமைக்காக மியன்மார் அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.
கடந்த ஜூன் 07ஆந் திகதி நடைபெற்ற நற்சான்றிதழ் வைபவத்தின் போது மியன்மாரின் சிரேஷ்ட பொது அமைச்சர் ஆங் ஹ்லேயிங்கிடம் தனது நற்சான்றிதழ்களை கையளித்த போதும், மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 73ஆவது ஆண்டு நினைவு தினத்தை நினைவுகூரும் போதும் தூதுவர் ஜனக பண்டார விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
இந்த சரக்கு செப்டெம்பர் 04ஆந் திகதி அனுப்பப்பட்டதுடன், செப்டெம்பர் மாத இறுதிக்குள் கப்பல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடையும் என்று இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.