உதிரிப்பாகங்களுக்கான இறக்குமதித் தடை; மின்னுயர்த்தி செயலிழந்து வீடுகளில் ‘சிறை’ பட்டு வாழும் மக்கள்!!
மின்சார உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு ஆளாகிவருகின்றனர்.
குறிப்பாக பழுதடையும் மின்னுயர்த்திகளுக்கான சில உதிரிப்பாகங்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டினால் அவற்றைப் பழுதுபார்க்கமுடியாத நிலையேற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பைப் பொறுத்தமட்டில் பெரும்பாலானோர் உயர்ந்த தொடர்மாடி வீடுகளிலேயே வசித்துவருகின்றனர். குறித்த தொடர்மாடி வீடுகள்
10 தொடக்கம் 35 வரையான மாடிகளைக் கொண்டிருப்பதுடன் மின்னுயர்த்திகள் மூலமாகவே அவற்றை இயக்க வேண்டிய நிலையும் காணப்படுகின்றது.
தொடர்மாடி வீடுகளில் வசிப்போரின் மின்னுயர்த்திகள் செயலிழந்தாலோ அல்லது மின்சாரம் தடைப்பாட்டாலோ மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியில் வரமுடியாமலும், வெளியிலிருந்து உள்ளே செல்லமுடியாமலும் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்குவதைத் தவிர்க்கமுடியாது.
தொடர்மாடி வீடுகளுக்கு மாத்திரமன்றி, வைத்தியசாலைகள், நட்சத்திர விடுதிள் என அனைத்துக்கும் இதே கதியே ஏற்படும். மேலும் வயோதிபர் மற்றும் நோயாளர்கள் இதனால் வெகுவாகப் பாதிக்கப்படுவார்கள்.
அந்தவகையில் கொழும்பு, கொள்ளுப்பிட்டி அல்பிரட் ஹவுஸ் பகுதியில் அமைந்துள்ள சுமார் 30 குடும்பங்கள் வசிக்கும் தொடர்மாடி ஒன்றில் மின்னுயர்த்தி செயலிழந்ததன் காரணமாக அங்கு குடியிருக்கும் மக்கள் கடந்த ஒரு மாதத்துக்கும் அதிகமான காலம் மிகுந்த சிக்கல்களை எதிர்நோhக்கிவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு வசிக்கும் வயோதிபர்கள் மற்றும் நோயாளர்கள் தங்கள் குடிமனைகளில் இருந்தும் வெளிவரமுடியாது வீடுகளிலேயே ‘சிறை’ப்பட்டுள்ளதாகக் கவலை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு அறிவித்தபோது, குறித்த மின்னுயர்த்தியைத் திருத்தியமைக்கத் தேவையான உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதியளிக்கவில்லை என்றும் டொலர் பிரச்சினை காரணமாகவே அவற்றைக் கொள்வனவு செய்யமுடியாத நிலை காணப்படுவதாகவும் கையை விரிக்கின்றனர்.
இதனால் அப்பாவி மக்களே பாரிய சிரமங்களை எதிர்நோக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது. அந்தவகையில் மக்களின் அத்தியாவசிய தேவைகளுடன் தொடர்புடைய மின்சார உதிரிப்பாகங்களையேனும் இறக்குமதி செய்வதற்கான அனுமதியை வழங்கவேண்டியது அவசியமாகும்.
இதுவரைகாலம் அனைத்துவிதமான இயந்திரங்கள் மற்றும் மின்சார சாதனங்களுக்கும் வெளிநாடுகளிலேயே தங்கியிருந்த நிலையில், தற்போது அவற்றின் உதிரிப்பாகங்களுக்குத் தடைவிதிக்கப்படும் பட்சத்தில் எவ்வாறு அவற்றை இயக்குவது, பழுதுபார்ப்பது என மக்கள் கேள்வியெழுப்புகின்றனர். எனவே அரசாங்கம் இவ்விடயத்தில் துரித நடவடிக்கை எடுக்கமுன்வரவேண்டும்.