ஓணம் கொண்டாட்டத்தையொட்டி 5 நாட்களில் ரூ.324 கோடிக்கு மது விற்பனை..!!
கேரளாவில் மது விற்பனையை அரசின் பெவ்கோ நிறுவனம் நடத்தி வருகிறது. இம்மாநிலத்தில் மது அருந்துவோர் எண்ணிக்கை மற்ற மாநிலங்களை விட மிக அதிகம். இங்கு 3 கோடியே 30 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இவர்களில் சுமார் 30 லட்சம் பேர் மது அருந்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. இந்த 30 லட்சம் பேரில் 27 லட்சம் ஆண்களும், 3 லட்சம் பெண்களும் தினமும் மது அருந்துவதாக கூறப்படுகிறது. இவர்களை தவிர விசேஷ தினங்களில் இங்கு மது அருந்துவோர் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.
அந்த வகையில் கேரளாவின் அறுவடை திருவிழாவான ஓணம் பண்டிகையையொட்டி இங்கு மது விற்பனை மிக அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பிரச்சினை காரணமாக கேரளாவில் ஓணப்பண்டிகையின்போது மது விற்பனை அதிக அளவில் நடைபெறவில்லை. ஆனால் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் அங்கு தற்போது மது விற்பனை அமோகமாக நடக்கிறது. ஓணப்பண்டிகை தொடங்கிய முதல் 5 நாட்களில் மட்டும் மாநிலம் முழுவதும் மது விற்பனை சுமார் 30 சதவீதம் அதிகமாகி இருப்பதாக மாநில மது விற்பனை கழகத்தின் நிர்வாக இயக்குனர் யோகேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
கேரளாவில் கடந்த ஆண்டு ஓணப்பண்டிகைக்கு மது விற்பனை ரூ.561 கோடிக்கு மட்டுமே நடந்தது. ஆனால் இந்த ஆண்டு பண்டிகை தொடங்கிய முதல் 5 நாளிலேயே விற்பனை ரூ. 324 கோடியை தாண்டிவிட்டது. எனவே இந்த ஆண்டு ஓண பண்டிகைக்கான மது விற்பனை ரூ. 700 கோடியை தாண்டும் என்று எதிர்ப்பார்க்கிறோம். மேலும் இந்த ஆண்டு மாநிலம் முழுக்க 96 மது விற்பனை கூடங்கள் புதிதாக திறக்கப்பட்டு உள்ளது. இந்த கடைகள் மூலம் மது விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
\