ஆந்திராவில் விநாயகர் ஊர்வலத்தில் டிராக்டரில் மது விநியோகம்- எதிர்க்கட்சிகள் கண்டனம்..!!
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம், தாடேப்பள்ளியில் உள்ள கேட் சென்டர் அருகே அப்பகுதியை சேர்ந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். நேற்று விநாயகர் சிலையை விஜர்ஜனம் செய்வதற்காக ஊர்வலமாக சென்றனர். அப்போது தண்ணீர் சப்ளை செய்யும் டிராக்டரில் மதுபானங்களை ஊற்றி தண்ணீர் கலந்து குழாய் மூலம் ஊர்வலத்தில் வந்தவர்களுக்கு போலீசார் கண்முன்னே வினியோகம் செய்தனர் .
மது பிரியர்கள் விநாயகர் ஊர்வலத்தை காண வந்ததை விட மது குடிப்பதற்காக பிளாஸ்டிக் டம்ளர்களுடன் வரிசையில் நின்று வாங்கி குடித்து சென்றனர் . முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இந்த சம்பவம் நடந்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது தொடர்பாக எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். போலீசார் கண் முன்னே ஆளும் கட்சியினர் டிராக்டரில் மதுபானம் கொண்டு வந்து குழாயில் தண்ணீர் போல விநியோகம் செய்தது கண்டனத்துக்குரியது. முதல்வர் வீட்டின் அருகே நடைபெற்ற இந்த சம்பவம் விநாயகரையும், ஊர்வலத்தை காண வந்த பெண்களை அவமானப்படுத்தும் செயல் என கூறியுள்ளனர்.