;
Athirady Tamil News

அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு வயிற்றுக்கோளாறு வந்தால்..!!

0

முன்பெல்லாம் சாதாரண நாட்களில் இனிப்பு, கார வகைகள், நொறுக்கு தீனிகள் சாப்பிடுவது வழக்கமாக இருந்ததில்லை. என்றைக்காவது வரும் பண்டிகை நாட்களில்தான் இட்லி, தோசையே கிடைத்து வந்தது. ஆனால் இன்றைக்கு நொறுக்குத்தீனிகள் பெருகிவிட்டன. பொதுவாகவே எல்லா நாட்களிலும் அளவுடன் உண்ண வேண்டும் என்பதை ஆயுர்வேதம், ‘மாத்ராதீசியம்’ என்ற பெயரில் விளக்குகிறது. ஒருவரின் செரிக்கும் சக்தியாகிய அக்னியின் பலத்தை பொறுத்து, உணவின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது. எந்த அளவு உணவு இயற்கையாக உடலை கெடுக்காமல், உரிய காலத்தில் ஜீரணமாகிறதோ அது ஒருவருக்குத் தேவையான உணவாகும்.

உணவின் அளவை மிகவும் குறைத்து உண்டால் உடலின் பலமும் பொலிவும் குறையும், வாத நோய்கள் உண்டாகும். சுவை காரணமாக பலரும் இனிப்பு, காரம், பலகார வகைகளை அதிகம் உண்பதால், வாத, பித்த, கபம் அதிகமாகி உடல் செரிமான பக்குவத்தை இழக்கிறது. இதனால் அஜீரண நோய்கள், வாந்திபேதி, வயிற்று வலி போன்றவை வருகின்றன. சில நேரங்களில் உணவு மந்தமாகி. உடலில் தங்கி இருக்கும். வயிற்றை ஊசியால் குத்துவதுபோன்று உணரப்படலாம். வயிற்று வலி, வயிற்று பொருமல், தலைவலி, கழிச்சல், தலைச்சுற்றல், விரைப்பு, வாந்தி, சளி உருவாதல் போன்றவை காணப்படும். பலம் குறையும், இவற்றுக்கு `ஆமம்’ என்று பெயர்.

இவ்வாறு தகாத உணவை, கூடாத உணவை, அளவுக்கு அதிகமாக உண்டால் அது விஷத்தன்மை பெறும், இதை `ஆமவிஷம்’ என்பார்கள். பழங்காலத்தில் இப்படிப்பட்ட நிலையில் உள்ளவர்களுக்கு வசம்பு, இந்துப்பு ஆகியவற்றை கொடுத்து வாந்தி வரச் செய்வார்கள். அரிசி கஞ்சியை கொடுப்பார்கள். அஜீரண நிலையில் மருந்து கொடுக்க மாட்டார்கள், பட்டினியாக இருக்க வைத்து செரிக்க விடுவார்கள். பிறகு மருந்துகளை கொடுப்பார்கள். எனவே எப்போதும் உடலுக்கு பழக்கமான, ஒத்துக்கொள்ளக்கூடிய, சுத்தமான, நன்மை தரக்கூடிய உணவை மனதை ஒருநிலைப்படுத்தி உண்ண வேண்டும். குளித்துவிட்டு, அமைதியான மனநிலையுடன் உணவை சாப்பிட வேண்டும். அறுசுவையில், இனிப்புள்ள உணவை முதலில் உண்ண வேண்டும், புளிப்பு, உப்பு நடுவில் வர வேண்டும், துவர்ப்பு கடைசியில் வர வேண்டும். இரைப்பையின் பாதி பாகத்தை திட உணவாலும், கால் பாகத்தை திரவ உணவாலும் நிரப்ப வேண்டும். எஞ்சியுள்ள கால் பாகத்தை வாயுவின் சஞ்சாரத்துக்கு விட்டுவிட வேண்டும், என்கிறது பாரம்பரிய மருத்துவ முறை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.